சென்னை: கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நபர் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கை ரத்து செய்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், கீழமை நீதிமன்றத்துக்கும், போலீஸாருக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த நந்தகிஷோர் சந்தக்என்பவர், தனது உறவினர் கொலைமிரட்டல் விடுப்பதாக ஏழுகிணறு போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, அவரது உறவினர் கீழ்ப்பாக்கம் ராதேஷ் சியாம் சந்தக் உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
முதலில் கொலை மிரட்டல் என்று வழக்கு பதிவு செய்த போலீஸார், பின்னர் கொலை செய்ய முயன்றதாகவும், தொடர்ந்து நந்த கிஷோர் சந்தக்கை கொலை செய்து விட்டதாகவும் மாற்றி, வழக்கு பதிவு செய்தனர்.
தங்களது மீதான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராதேஷ் சியாம் சந்தக் உள்ளிட்ட 6 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், நந்தகிஷோர் சந்தக் தனது சித்தப்பா என்றும், குடும்பசொத்துப் பிரச்சினை தொடர்பாக தங்களுக்கு எதிராக அவர் போலீஸில் புகார் அளித்ததாகவும், தற்போது சமரசம் ஏற்பட்டு விட்டதால் வழக்கை ரத்து செய்யுமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, "கொலை வழக்கில் எப்படி சமரசமாக செல்ல முடியும்" என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது ராதேஷ் தரப்பில்,புகார் அளித்த நந்தகிஷோர் சந்தக் கொலை செய்யப்படவில்லை என்றும், அவர் தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளதாகவும், போலீஸார் கொலை மிரட்டல் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், நந்தகிஷோர் சந்தக், தான் கொலை செய்யப்படவில்லை என்று சாட்சியம் அளித்தார்.
கால்கள் இருக்கிறதா? - அப்போது நந்தகிஷோர் சந்தக்கைப் பார்த்து நீதிபதி, "கொஞ்சம் முன்னால் வாருங்கள்" என்று அழைத்து, "உங்களுக்கு கால்கள் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்கிறேன், கொஞ்சம்பயமாக இருக்கிறது" என்றார். அப்போது நீதிமன்றத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.
பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான கொலை வழக்கைரத்து செய்த நீதிபதி, இதுபோலசட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அத்துமீறல்களில் ஈடுபடும் போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை கீழமை நீதிமன்றமும் இயந்திரத்தனமாக விசாரித்துள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையைக்கூட சரிபார்க்கவில்லை என்று கண்டனம் தெரிவித்தார்.