வெளிச்சந்தையில் விலை உயர்வைத் தடுக்கும் வகையில் 13 ஆயிரம் டன் துவரம் பருப்பை அவசரமாக கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. விலை உயர்வுக்கான காரணத்தை அறிந்து அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியுமா என்று கேட்டு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடந்த மாதம் தகவல் அனுப்பியது. தமிழகத்தில் விலைவாசியை தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. உணவுத்துறை அமைச்சர் தலைமையில் உள்ள விலைவாசி கண்காணிப்புக் குழு, தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது.
சில மாதங்களாக சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, சமையல் எண்ணெய் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினருடன் சில வாரங்களுக்கு முன்பு அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பருப்பு வகைகளின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது அரசின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து, வெளிச்சந்தையில் விலை உயராமல் தடுக்க ரேஷன் கடைகளில் சிறப்பு விநியோகத் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டு வரும் பருப்பு வகைகளின் இருப்பை கணிசமாக அதிகரிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, கனடா நாட்டு துவரம் பருப்பை 13 ஆயிரம் டன் அளவுக்கு அவசரமாக கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் இதை வாங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் சிலரிடம் கேட்டபோது, “சிறப்பு விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பருப்பு வகைகள், சில கடைகளில் 70 சதவீதம் பேருக்கு மட்டுமே கிடைக்கிறது. தற்போது 13 ஆயிரம் டன் பருப்பை கூடுதலாக கொள்முதல் செய்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்’’ என்றனர்,