கரூர்: கரூர் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மூலம் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி பள்ளிகளில் நோடல் ஆசிரியர், மாணவ தூதுவர் நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில், கரூர் மாநகராட்சி பகுதியில் பள்ளி மாணவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி, கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 103 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு டெங்கு, ஏடிஸ் கொசு, அவை உருவாகும், பரவும் விதம் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.
மேலும், ஒவ்வொரு பள்ளியிலும் டெங்கு விழிப்புணர்வு பணிக்காக தலா ஒரு நோடல் ஆசிரியர் மற்றும் மாணவ தூதுவரை நியமிக்க அறிவுறுத்தப்பட்டது. அத்துடன், மாணவ, மாணவிகளுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் அனுப்பப்பட உள்ள வீடியோவை மாணவர்களுக்கு காண்பிக்கவும் வலியுறுத்தப்பட்டது.
அதன்படி, பள்ளி மாணவர்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் வீடு, வீடாக சென்று டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போது, வீடுகளில் தண்ணீரை திறந்து வைக்காமல், மூடி வைக்கவேண்டும். ப்ரிட்ஜின் பின்பகுதி, உரல்கள், பழைய டயர்கள், கொட்டாங்குச்சிகளில் தண்ணீரை தேங்க விடக்கூடாது எனக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதில், சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கு பள்ளி அளவிலும், மாநகராட்சி சார்பிலும் பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு காய்ச்சலா? தகவல் தெரிவிக்க வாட்ஸ்அப் குழு: கரூர் மாநகராட்சி சார்பில் அனைத்து தலைமை ஆசிரியர்களை கொண்ட வாட்ஸ்அப் குழு தொடங்கப்பட உள்ளது. மாணவர்கள் காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு விடுப்பு எடுத்தால், அதுகுறித்த விவரத்தை தலைமை ஆசிரியர்கள் வாட்ஸ்அப் குழுவில் பதிவிடவேண்டும்.
இதைத் தொடர்ந்து, மாநகராட்சி சுகாதாரத் துறை ஊழியர்கள் மாணவரின் வீட்டுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட சுகாதார மற்றும் தூய்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
பரிசு காத்திருக்கு.... மாநகர நல அலுவலர் லட்சியவர்ணா கூறும்போது, ‘‘டெங்கு பரவலை தடுக்கும் வகையில் கரூர் மாநகராட்சியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மூலம் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெங்கு விழிப்புணர்வு குறித்து சிறப்பாக செயல்படும் மாணவர் குழுவுக்கு அக்.2-ம் தேதி பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.
என்ன செய்ய வேண்டும்? - காய்ச்சல் இருந்தால் மருத்துவர் அறிவுரைப்படி உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். நல்ல ஓய்வு அவசியம். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
அறிகுறிகள்: அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களில் வலி மற்றும் சிவந்து காணப்படுதல், மூட்டு மற்றும் தசை வலி, சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தோல் அலர்ஜி