சென்னை: "தொகுதி மறுவரையறை செய்தால் மிகப் பெரிய அளவில் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும். தமிழகத்துக்கு 8 எம்பிக்கள் குறையலாம். மத்தியப் பிரதேசம், உத்தர ப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புதன்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "திமுக கூட்டணியில்தான் மதிமுக இருக்கிறது. திமுக கூட்டணியில் ஒரு சலசலப்பு ஏற்படவில்லை. திமுக கூட்டணி எந்தச் சலசலப்பும் இல்லாமல், அமைதியாக நீரோடைப் போல சென்று கொண்டிருக்கிறது" என்றார்.
அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்த கேள்விக்கு, "அதிமுக பாஜக கூட்டணி முறிவு என்பது உண்மையா அல்லது நாடகமா என்பது காலப்போக்கில்தான் தெரியும்" என்றார்.
தமிழக ஆளுநரைத் திரும்பப் பெறக் கோரிய விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தமிழக ஆளுநரை திரும்ப பெறக் கோரி 50 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டது. 57 எம்பிக்கள், 32 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டிருந்தனர். குடியரசுத் தலைவர் மாளிகையின் செயலாளரிடம் அவற்றை சமர்ப்பித்தேன். இதுதொடர்பாக உடனடியாக பதில் அனுப்புவதாக கூறியிருந்தனர். இது குறித்து நேற்று எனக்கு பதில் வந்தது.
ஆளுநரைத் திரும்பப் பெறக் கோரி கொடுத்த கையெழுத்துப் படிவங்களை, உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்திருந்தனர். தமிழகத்தில் ஆளுநரின் செயல்பாடுகளை இத்தனை பேர் எதிர்க்கிறோம் என்பதற்கான ஒரு மாதிரியாக நாங்கள் அந்தப் பணியை செய்திருக்கிறோம். ஆளுநருக்கு எதிராக கோடிக்கணக்கான பேர் கையெழுத்திட தயாராக உள்ளனர். மதிமுக சார்பில் ஒரு மாதத்துக்குள் 50 லட்சம் கையெழுத்துகளைப் பெற்று அனுப்பினோம்" என்றார்.
தொகுதி மறுவரையறை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "தொகுதி மறுவரையறை செய்தால் மிகப் பெரிய அளவில் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும். தமிழகத்துக்கு 8 எம்பிக்கள் குறையலாம். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவ்வாறு செய்யும்போது இந்தியாவினுடைய மொத்த வரைபடத்தில், நம்முடைய எண்ணிக்கை குறையும்போது அதனுடைய விளைவுகள் இந்திய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் விரோதமாக இருக்கும்.
இந்தியா என்கிற ஓர் அமைப்பு, ஒரு நாடு என்ற எண்ணமே போய்விடும். அதன் தாக்கத்தால் அனைத்து மாநிலங்களிலும் எதிர்விளைவுகள் ஏற்படும். மிகப் பெரிய சோதனையில் சென்று அது முடியும்" என்று அவர் கூறினார்.