திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஆண்டியப்பனூர் அணை 24-வது முறையாக நிரம்பி உபரிநீர் நேற்று முதல் வெளியேறி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஜவ்வாதுமலை தொடர்களிலும், ஏலகிரி மலை பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டியது. பகல் நேரங்களில் வழக்கமான வெயில் கொளுத்தினாலும், மாலை 3 மணிக்கு மேல் வானம் இருண்டு திடீரென மழை பெய்ய தொடங்கி இரவு வரை நீடிக்கிறது. ஒரு சில நேரங்களில் விடிய, விடிய மழைகொட்டி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது மட்டுமின்றி தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகளும் கனமழை காரணமாக வேகமாக நிரம்பி வருகின்றன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அணை கனமழை காரணமாக 24-வது முறையாக நேற்று நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. ஆண்டியப்பனூர் அணையானது கடந்த 2007-ம் ஆண்டு கட்டப்பட்டது. பருவமழை காலங்களில் கனமழை பெய்யும் போதெல்லாம் ஆண்டியப்பனூர் அணை நிரம்பி வழிவது வழக்கம். தற்போது, பெய்து வரும் கனழமையால் 24-வது முறையாக அணை நிரம்பி நேற்று காலை முதல் உபரி நீர் வெளியேறி வருகிறது.
அணையின் முழு கொள்ளளவு 112.2 மில்லியன் கன அடியாகும். இதன் உயரம் 8 மீட்டராகும். அணையில் இருந்து விநாடிக்கு 23.48 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் தண்ணீர் அருகாமையில் உள்ள எகிலேரி, செலந்தம்பள்ளி ஏரி, மடவாளம் ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த ஏரிகள் தற்போது வேகமாக நிரம்பி வருவதால், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தொடர் மழை காரணமாக ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் கவனமுடன் இருக்க வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.