கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலை நடைபாதையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து பூக்கள், பழங்கள், காய்கறிகள், குளிர்பான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் ஜிஎஸ்டி சாலையின் அகலம் குறைந்து, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். மேலும் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்லும் நிலையே இருந்தது.
மேலும், சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டிருப்பதால் அடிக்கடி சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டு வந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்று ‘சந்தைக்கடையாகும் ஜிஎஸ்டி சாலை’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத் உத்தரவின்பேரில், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் தாமோதரன் தலைமையிலான ஊழியர்கள் நேற்று அப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தையும் அகற்றினர். மேலும் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யாத வண்ணம் ஒழுங்குபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அப்போது ஆணையர் தெரிவித்தார்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, "பத்திரிக்கையில் செய்தி வந்தவுடன் கண் துடைப்புக்காகவும் ஆட்சியர் சொல்லிவிட்டார் என்பதற்காகவும் அதிகாரிகள் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளனர்.
சாலை ஆக்கிரமிப்பு அளவை சற்று குறைத்துக் கொள்ளுங்கள் என்று கடைக்காரர்களுக்கு ஆதரவாக பேசி வந்திருப்பதாக தெரிகிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது மட்டுமின்றி பேருந்து நிலையத்தில் பேருந்து உள்ளே செல்லும் முன் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் ஒழுங்குபடுத்த நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.