ஓசூர்: தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து, பெங்களூருவில் நேற்று (26-ம் தேதி) முழு அடைப்பு போராட்டம் நடந்ததால் தமிழக வாகனங்கள் கர்நாடகா செல்ல தடை விதிக்கப்பட்டது. அதேநேரம் கர்நாடக அரசுப் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் வழக்கம்போல தமிழகத்தில் இயங்கின.
தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று (26-ம் தேதி) பல்வேறு அமைப்புகள் மற்றும் விவசாயச் சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 8 மணியுடன் கர்நாடக மாநிலத்துக்கு ஓசூர் வழியாக இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஓசூரில் நிறுத்தப்பட்டன. மேலும், கர்நாடக மாநிலம் சென்ற தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்தும் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்குள் ஓசூருக்கு திரும்பின.
இதனிடையே, பெங்களூருவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்ததை தொடர்ந்து, தமிழக வாகனங்கள் கர்நாடகா செல்ல தடை விதிக்கப்பட்டது.
மேலும், கர்நாடக மாநிலம் சென்ற தமிழக பதிவெண் கொண்ட இருசக்கர வாகனம், கார், சரக்கு வாகனம், பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் தமிழக எல்லையில் போலீஸார் தடுத்து நிறுத்தி அனுப்பிவைத்தனர்.
ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து தமிழக அரசு நகரப் பேருந்துகள் மட்டும் ஜுஜுவாடி வரை இயக்கப்பட்டன. கர்நாடக மாநிலம் செல்லும் பயணிகள் ஜுஜுவாடி வரை பயணம் செய்து பின்னர் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு ஆட்டோ மற்றும் பேருந்துகளில் சென்றனர்.
அதேநேரம் கர்நாடக மாநில அரசுப் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் வழக்கம்போல தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டன. கர்நாடக மாநில தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
தமிழக எல்லையில் பாதுகாப்புப் பணிகளை சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி மற்றும் கிருஷ்ணகிரி எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
நேற்று மாலை 6 மணிக்கு பிறகு தமிழகத்தைச் சேர்ந்த வாகனங்கள் வழக்கம்போல் இயங்கின.