சென்னை தி.நகரில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான ‘தமிழோடு விளையாடு’ வினாடி வினா போட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று தொடங்கி வைத்தார். உடன், தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் டி.சி.இளங்கோவன், தலைவர் எஸ்.ராஜா உள்ளிட்டோர். படம்: ம.பிரபு 
தமிழகம்

‘தமிழோடு விளையாடு’ விநாடி-வினா போட்டி: அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை - ‘தமிழோடு விளையாடு’ விநாடி-வினா போட்டி நிகழ்ச்சியை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார்.

கலைஞர் தொலைக்காட்சியில் ‘தமிழோடு விளையாடு’ எனும் பள்ளிகளுக்கு இடையேயான தமிழ் மொழி குறித்த விநாடி-வினா போட்டிக்கான நிகழ்ச்சியின் தொடக்க விழா சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அவர் பேசியதாவது: ஒவ்வொருவருக்கும் தாய்மொழி இருக்கும். தாய்மொழிக்கும் எல்லாம் தாய்மொழியாக தமிழ்மொழி இருந்து வருகிறது. தமிழால் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தமிழால் ஒன்று கூடியிருக்கின்றோம். அந்தவகையில் பள்ளி மாணவர்களிடடையே தமிழ்மொழியை கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களில் இருந்து பள்ளிமாணவர்கள் இதில் பங்கேற்கஉள்ளனர்.

திராவிட இனம் எழுச்சி பெறுவதற்கு முன்னதாக சாதி, மதத்தின் பெயரால் ஒன்றிணைய வேண்டும் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தனர். திராவிட இனம் எழுச்சி பெற்ற பிறகு நம் அனைவருக்கும் தாய்மொழி தமிழ்தான். தமிழால் அனைவரும் ஒன்றிணைவோம் என்று சொன்னவர்கள் அண்ணாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும்.

இன்றைய காலகட்டத்தில் ஆங்கிலம் கலக்காமல் நம்மால் தொடர்ந்து பேச முடியாத நிலைவந்துவிட்டது. இதை மனதில் வைத்துக்கொண்டு தமிழை வளர்க்கபல்வேறு திட்டங்கள் தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தமிழ் திறனறித் தேர்வு, தமிழ் கூடல் நிகழ்ச்சி, புத்தாக்க நிகழ்ச்சி போன்றவை நடத்தப்படுகின்றன.

மழைக்காலங்களில் பள்ளிகளில் எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எப்படிபாதுகாத்துக்கொள்ள வேண்டும்உள்ளிட்டவை தொடர்பான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா காலத்துக்கு பிறகு மாணவர்களிடையே மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதிகம் உணர்ச்சிவசப்படுகின்றனர். மதிப்பெண்கள் மட்டும் மாணவர்களை மதிப்பீடு செய்யாது. தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் பள்ளிகளில் ஊக்கப்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் டி.சி.இளங்கோவன், தலைவர் எஸ்.ராஜா, ஜோலார்பேட்டை யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் எம்.சிவப்பிரகாசம், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார், கல்வியாளர் கே.ஆர்.மாலதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT