தமிழகம்

சந்தை கடையாகும் ஜிஎஸ்டி சாலை: கூடுவாஞ்சேரியில் ஆக்கிரமிப்பு கடைகளால் வாகன ஓட்டிகள் அவதி

செய்திப்பிரிவு

கூடுவாஞ்சேரி: சென்னை புறநகர் பகுதிகளில் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பகுதியாக தற்போது கூடுவாஞ்சேரி உள்ளது. மேலும் சென்னையின் பிரதான நுழைவு வாயிலாகவும் கூடுவாஞ்சேரி விளங்கி வருகிறது. இதனாலேயே கூடுவாஞ்சேரி அடுத்த கிளாம்பக்கத்தில் மிகப்பெரிய பேருந்து நிலையம் தமிழக அரசால் கட்டி முடிக்கப்பட்டு, அவை விரைவிலேயே பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படவுள்ளது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி,கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதிகளுக்கு தினமும் இவ்வழியாகத் தான் ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் இரவு,பகல் என எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். அதுவும் வார இறுதி நாட்களான வெள்ளி, சனிக்கிழமைகளில் போக்குவரத்து நெரிசல் கட்டுக்கடங்காமல் இருக்கும்.

என்னதான் நெடுஞ்சாலைத் துறை சாலையை அகலப்படுத்தினாலும் கூட, போக்குவரத்து நெரிசல் மட்டும் இதுவரை குறைந்தபாடில்லை. இதற்கு பிரதான சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளே காரணம். குறிப்பாக கூடுவாஞ்சேரி அரசு மருத்துவமனை, வெளியூர் பேருந்துகள் நின்று செல்லும் பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. இந்தப் பகுதியில் முன்பெல்லாம் வெறும் கூடையில் மட்டுமே வைத்து பொருட்களை விற்பனை செய்து வந்த வியாபாரிகள் தற்போது சாலையை 10 அடி முதல் 15 அடி வரை ஆக்கிரமித்து, பெரிய மார்க்கெட் போன்று உருவாக்கியுள்ளனர்.

ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்திருக்கும் சூழலில் வாகனஓட்டிகளுக்கு இந்த கடைகள் கூடுதல் சிரமத்தை கொடுக்கின்றன. இதுதவிர இந்தக் கடைகளில் பொருள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள், தங்களது வாகனங்களை ஜிஎஸ்டி சாலையிலேயே ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்திவிடுகின்றனர்.

இதனால் சில நேரங்களில் சிறு சிறு விபத்துகளும் நடக்கின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நெடுஞ்சாலை துறை மற்றும் கூடுவாஞ்சேரி காவல்துறை அதிகாரிகள் மவுனம் சாதிக்கின்றனர். இதனால் கடையின் ஆக்கிரமிப்பு அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதேநிலை நீடித்தால், ஒரு கட்டத்தில் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை என்பது ஒற்றையடி சாலையாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு சாலை விரிவாக்கப் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதுடன், பெரும் விபத்துக்களும் ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை உடனடியாக அகற்றி அவர்களின் வாழ்தாரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்வதுடன் பயணிகள்தடையில்லாத, பாதுகாப்பாக செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

SCROLL FOR NEXT