சென்னை: சென்னை போலீஸ் தலைமை அலுவலகமான ஆணையர் அலுவலகம் வேப்பேரி, ஈவிகே சம்பத் சாலையில் உள்ளது. 8 தளங்கள் கொண்ட இந்த பிரம்மாண்ட அலுவலகத்தில் மோசடி தடுப்பு பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகள் உள்ளன. 500-க்கும் மேற்பட்ட போலீஸார், போலீஸ் அதிகாரிகள், அமைச்சுப் பணியாளர்களும் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
இங்கு துணை ஆணையர்கள் முதல் ஆணையர் வரை மேல்தளங்களுக்குச் செல்லும் வகையில் போலீஸ் அதிகாரிகளுக்கென தனி லிப்ட் வசதி உள்ளது. மேலும் போலீஸார், அமைச்சுப் பணியாளர்கள், பொது மக்கள் செல்வதற்கு தனித்தனியாக 2 லிப்டுகள் உள்ளன. இந்நிலையில், போலீஸார் மற்றும் பொது மக்களின் பயன்பாட்டுக்காக உள்ள லிப்டுகள் அடிக்கடி பழுதடைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சில நேரங்களில் தரை தளத்திலிருந்து 8-வது தளம் நோக்கி செல்லும் லிப்ட் பழுதடைந்து அப்படியே தரைத் தளம் நோக்கி பாய்ந்துள்ளதாக அதில் பயணித்த போலீஸார் மரண பயத்துடன் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த லிப்டுகள் போதிய பராமரிப்பு இல்லாததால் லிட்டுகளுக்குள் ஒயர்கள் தொங்கி கொண்டிருக்கின்றன. அதுமட்டும் அல்லாமல் அந்த லிப்ட் எத்தனையாவது தளத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை தெரிவிக்கும் டிஜிட்டல் எண்கள் கூட தெரிவது இல்லை.
இதனால், எந்த தளத்தில் பயணிக்கிறோம் என்ற தெரியாமல் குழம்பும் நிலையும் உள்ளது. அதுமட்டும் அல்லாமல் காவல்துறை மற்றும் அமைச்சுப் பணியாளர்கள், பொது மக்கள் என பலதரப்பைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக கர்பிணிகள், வயதானவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் பழுதடைந்த லிப்டுகளுக்குள் பயத்துடனே பயணிக்கின்றனர்.
2 லிட்டுகளில் ஒன்று சுழற்சி முறையில் அவ்வப்போது பழுதடைவதால் மற்றொன்றில் செல்ல நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையும் உள்ளது. எனவே, மரண பயத்தை காட்டி வரும் லிப்டுகளை மாற்றி விட்டு புதிய லிப்ட்டுகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் போலீஸார் கூறும்போது, ‘இங்குள்ள லிப்டுகள் இயங்குவதை விட பழுதடைந்து செயல் படாமல் உள்ள நாட்களே அதிகம். எனவே, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும்’ என்றனர்.
போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பழுது ஏற்படும்போதெல்லாம் உடனடியாக சரி செய்கிறோம். மேலும், தொடர் பழுதுக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும்’ என்றனர். அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன் புதிய லிப்டுகளை பொருத்துவதே நிரந்தர தீர்வுக்கு வழி என்பதே ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.