கிருஷ்ணகிரி: மூத்த முன்னோடிகள் தான் திமுகவின் வேர் என கிருஷ்ணகிரியில் நடந்த பொற்கிழி வழங்கும் விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு, கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.மதியழகன் எம்எல்ஏ தலைமை வகித்தார். உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், 1,750 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழியை வழங்கி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் தந்த பெருமை, திமுகவைச் சாரும். மூத்த முன்னோடிகளாகிய நீங்கள் தான் திமுகவின் வேர்கள். ரத்தத்தை சிந்தி கட்சியை வளர்த்தீர்கள். உங்களை கவுரவிப்பதில் நான் பெருமை அடைகிறேன். நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் ஒலித்த எதிர்ப்பு குரல் தற்போது, வட மாநிலங்களிலும் தொடங்கி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி, கிழக்கு, மேற்கு மாவட்ட இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, “மாநாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை நமது சேலம் இளைஞர் அணி மாநாடு மூலம் நிரூபிக்க வேண்டும். மத்திய அரசு 9 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சியை தந்தார்கள். இறந்தவர்களின் உடலை வைத்து பணம் பறிப்பார்கள்.
இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவக் காப்பீடு செய்துள்ளார்கள். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீட்டுக்கு விரட்ட வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணி வைத்தாலும் சரி, கூட்டணியை முறித்துக் கொண்டாலும் சரி தேர்தலில் திமுக தான் வெற்றி பெறப் போகிறது. இவ்வாறு அவர் பேசினார். இதில், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.