திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை தொகுதிகள் அதிமுக வசம் உள்ள நிலையில் கூட்டணி முறிவு குறித்து எந்தவித உணர்வையும் வெளிப்படுத் தாமல் அதிமுக நிர்வாகிகள் அமைதி காத்தனர்.
இதனால், நிர்வாகிகள் மீது அதிமுக தொண்டர்கள் அதிருப்தி யடைந்துள்ளனர். பா.ஜ.வுடனான கூட்டணி முறிவு குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானதையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கட்சிக் கொடிகளை அசைத்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், திண்டுக்கல்லில் மட்டும் அதிமுக நிர்வாகிகள் அமைதி காத்தது அக்கட்சி தொண்டர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதுவும் திண்டுக்கல், நிலக்கோட்டை, நத்தம் தொகுதிகள் அதிமுக வசம் உள்ளன. 3 தொகுதிகளிலும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதற்கும் மேலாக மாநிலப் பொருளாளராக திண்டுக்கல் சி.சீனிவாசன், மாநில துணைப் பொதுச் செயலாளராக நத்தம் ஆர்.விசுவநாதன் உள்ளனர்.
மாநிலம் முழுவதும் கொண் டாட்டத்தில் அதிமுகவினர் ஈடுபட்டபோது திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ஏன் இப்படி அமைதி காக்க வேண்டும் என அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகளை கேள்வி கேட்டுள்ளனர். மேலிடத்தில் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை என்பதால் அமைதி காக்கிறோம் என அதற்கு நிர்வாகிகள் சிலர் பதில் அளித்தனர்.
பழநியில் மட்டும் அதிமுகவினர் சிலர் கூட்டணி முறிவை வரவேற்று இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். மாவட்டத்தின் வேறு எந்தப் பகுதியிலும் அதிமுகவினர் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் அமைதி காத்தது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற் படுத்தியுள்ளது.
பழநி: பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதைக் கொண்டாடும் விதமாக, பழநியில் அதிமுக கிழக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராஜா முகமது தலைமையில் நிர்வாகிகள் அசோக், கோபி, பாபு, அபுதாகிர் உட்பட கட்சியினர், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.