திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசும் அமைச்சர் எ.வ.வேலு. 
தமிழகம்

சனாதன ஒழிப்பு என்பது உதயநிதியின் சொந்த கருத்தல்ல: அமைச்சர் எ.வ.வேலு திட்டவட்டம்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: சனாதன ஒழிப்பு என்பது அமைச்சர் உதயநிதியின் சொந்த கருத்தல்ல என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமல மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்டச் செயலாளர் தரணி வேந்தன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிரி, சரவணன், அம்பேத்குமார், ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் நரேஷ்குமார் வரவேற்றார்.

பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, “திமுக பலமாக உள்ளது. அமைச்சர் வீடுகளில் சோதனை நடத்தி ஆட்சியை வீழ்த்த நினைக்கும் எதிர்க்கட்சிகளின் பகல் கனவு நிறைவேறாது. சனாதன ஒழிப்பு என்பது அமைச்சர் உதயநிதியின் சொந்த கருத்தல்ல. பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் பேசிய கருத்து.

ஆனால், இந்துக்களை ஒழிக்க வேண்டும் என உதயநிதி பேசினார் என்று எதிர்க்கட்சிகள் திரிக்கின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளால் ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. திருப் பதியை மிஞ்சும் அளவுக்கு திருவண்ணாமலை மாட வீதியில் சிமென்ட் சாலை போடப்படுகிறது.

ஏற்றத்தாழ்வு உடையது சனா தனம். ‘ஆண்டான் அடிமை, தொட்டால் தீட்டு’ என்பதுதான் சனாதனம். இந்துக்களுக்கு நாங்கள் எதிரி கிடையாது. இந்துத்துவாவுக்குதான் எதிரி. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்” என்றார்.

இதில், சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மருத்துவரணி மாநில துணைத் தலைவர் கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகரச் செயலாளர் கார்த்திக் வேல்மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT