கிருஷ்ணகிரி: பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை தந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிருஷ்ணகிரியில் ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் காட்டிநாயனப்பள்ளியில் செயல்பட்டு வரும் கல்லூரி விடுதியில் ஆய்வு செய்தார். அப்போது, விடுதியிலுள்ள வசதிகள் குறித்து மாணவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து சமையற்கூடம், அரிசி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறை, உணவுக்கூடம், தங்குமிடம், கழிப்பறைகள் என விடுதியில் உள்ள அனைத்து வசதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், அங்குள்ள பதிவேட்டை ஆய்வு செய்து மாணவர்களின் எண்ணிக்கையை கேட்டறிந்து, கல்வியின் பொருட்டு வீட்டை விட்டு வெகு தூரத்தில் உள்ள விடுதியில் தங்கி படிக்கின்ற மாணவர்களுக்கு அனைத்து வசதிகளையும் சிறப்பாக செய்து கொடுக்க வேண்டும் என அலுவலர்கள் மற்றும் விடுதிப் பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.
இதேபோல், தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிற கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான விடுதியில் ஆய்வு மேற்கொண்டு சேமிப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த அரிசி, சமையல் எரிவாயு உள்ளிட்ட சமையல் பொருட்களின் இருப்பை பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரியான அளவில் இருக்கின்றதா என்று ஆய்வு செய்தார்.
மேலும், மாணவர்கள் மற்றும் விடுதிப் பணியாளர்கள் எண்ணிக்கை தொடர்பான தகவல்களைக் கேட்டறிந்த பின் உணவுக் கூடம், தங்குமிடம், குளியலறை மற்றும் கழிப்பிட வசதிகளை ஆய்வு செய்து, மாணவர்கள் தெரிவித்த நிறை, குறைகளின் அடிப்படையில் அவற்றை நிவர்த்தி செய்திட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து ஆய்வுகளின் அடிப்படையில் கோப்புகள் சரிவர பராமரிக்கப்படாமல், குளறுபடிகள் இருந்ததால், ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதி காப்பாளர் முருகன் என்பவரை தற்காலிக பணிநீக்கம் செய்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் தரேஸ் அகமது, ஆட்சியர் கே.எம்.சரயு, கூடுதல் ஆட்சியர் வந்தனா கார்க் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.