தமிழகம்

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை கொண்டுவந்து சாதனையாக கணக்கு காட்ட பார்க்கிறது பாஜக: திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

செய்திப்பிரிவு

திருப்பூர்: வாக்குறுதிகளை காப்பாற்றாத பாஜக, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்து சாதனையாக கணக்கு காட்ட பார்க்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக மேற்கு மண்டல மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள படியூரில் நேற்று நடந்தது. திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் வரவேற்றார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மக்களவைத் தேர்தலின் தொடக்கப்புள்ளியாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை திமுக நடத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டிகளை அமைத்துள்ளோம். கோடிக்கணக்கில் உறுப்பினர்களை கொண்ட இயக்கத்துக்காக தேர்தல் பணி செய்பவர்கள் நீங்கள். பல கட்ட ஆய்வுக்கு பிறகுதான், வாக்குச்சாவடி பொறுப்பாளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இங்கு கொடுத்த பயிற்சிகளை மனதில் வைத்து தேர்தலில் செயல்பட வேண்டும்.

தினமும் கட்சிக்காக 1 மணிநேரம் ஒதுக்குங்கள். அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கொண்டுவந்து தரும் மக்களின் நியாயமான கோரிக்கையை செவிசாய்த்து அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் நிறைவேற்றித்தர வேண்டும்.

அனைவருக்கும் பொதுவான மக்களாட்சியை நாம் நடத்துவதால், யாரும் நம்மை நிராகரிக்க முடியாது. ஆனால் மத்தியில் 2-வது முறையாக ஆளும் மோடி அரசு, 3-வது முறையாக வரக்கூடாது.

பாஜகவின் சாதனையல்ல: விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு ஆக்குவோம், ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தரப்படும் என மோடி சொன்னார். இவற்றையெல்லாம் செய்தாரா?

சந்திரயான் வெற்றி மற்றும் ஜி-20 மாநாட்டை மோடி பெருமையாக சொல்கிறார். சுழற்சி அடிப்படையில் ஜி 20-க்கு இந்தியா தலைமை வகித்தது. நிலவை நோக்கிய பயணம் பாஜகவின் சாதனை அல்ல. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து பலரின் விண்வெளி ஆராய்ச்சி பங்கு இதில் உண்டு.

திமுகவே குரல் கொடுத்தது: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்து பாஜக கணக்கு காட்ட பார்க்கிறது. ஆனால் அதனையும் உடனடியாக வழங்கவில்லை. 2029-ம் ஆண்டுதான் வழங்குவார்கள்.

இந்த வஞ்சக திட்டத்தை எதிர்த்து, திமுகதான் முதன்முதலில் குரல் கொடுத்தது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாத பாஜகவை, தமிழகத்தில் டெபாசிட் கூட வாங்கவிடக் கூடாது. அதிமுகவின் ஊழலுக்கும், பாஜகவின் மதவாதத்துக்கும் இருவரும் மாறி, மாறி துணை நிற்கின்றனர்.

பழனிசாமி ஊழல் வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவே டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு கரம் தருகிறது. சட்டப்பேரவைக்கும் தேர்தல் வந்தால், அதிமுகவின் இன்றைய நிலையும் போய்விடும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் நன்றி தெரிவித்தார். முன்னதாக திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆளுயர கருணாநிதி மற்றும் பேனா சிலையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இல.பத்மநாபன் உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினர். டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT