உடுமலை: உடுமலையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமராவதி அணை அமைந்துள்ளது. இந்த அணை 1956-ம் ஆண்டு கட்டப்பட்டது. அணை கட்டுவதற்கு முன்பாக, அங்கு பூர்வீகமாக விவசாயம் செய்து வந்த பழங்குடியின இனத்தைச் சேர்ந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
அவர்களிடமிருந்த நிலமும் அணைக்காக கையகப்படுத்தப்பட்டது. அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு, அணைக்கு அருகிலேயே கிழக்கு புறமாக வனத்துறைக்கு சொந்தமான காலியிடத்தில் தலா 2 சென்ட் வீடு கட்டுவதற்காக ஒதுக்கி குடியேற்றப்பட்டனர். ஆனால், வனத்துறை சார்பில் இதுவரை எந்தவித அடிப்படை வசதி களும் செய்து தரப்படவில்லை.
கல்லாபுரம் ஊராட்சியோடு இணைக்கப்பட்ட பின் கான்கிரீட் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், 50 ஆண்டுகளான நிலையிலும் இதுவரை பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.
இது குறித்து அங்கு வசிக்கும் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த நாகமணி, மகேஸ்வரி ஆகியோர், ‘இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியதாவது: திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக நூற்றாண்டுகளாக எங்கள் முன்னோர் விவசாயம் செய்த நிலம் அணைக்காக கையகப்படுத்தப்பட்டது. அதற்காக எந்தவித இழப்பீடும், நிவாரணமும் வழங்கவில்லை.
அப்போதிருந்த முன்னோர்களுக்கு அதுகுறித்த விழிப்புணர்வும் இல்லை. உரிமையை நிலைநாட்ட யாரும் உதவவும் இல்லை. இந்நிலையில், வனத்துறைக்கு சொந்தமான கரட்டுபதி எனும் இடத்தில் நபருக்கு 2 சென்ட்,ஒரு செண்ட் என வீடு கட்ட இடம் ஒதுக்கி தரப்பட்டது. அந்த இடங்களுக்கு இன்னும் முழுமையாக பட்டா வழங்கப்படவில்லை.
50 ஆண்டுகளான நிலையில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஒரே வீட்டில் 10 பேர் வரை வசிக்கும் நிலை உள்ளது. குடிநீர் வசதிகேட்டு பல ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்கள் குடியிருப்பை தாண்டி உள்ள கல்லாபுரம், பூச்சிமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு திரு மூர்த்தி அணையில் இருந்து குழாய் மூலமாக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
அதிலிருந்து எங்களுக்கு குழாய் அமைத்து தர வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக வாய்க்காலில் திறந்துவிடப்படும் நீரையே குடிநீருக்காகவும், உணவு சமைக்கவும் பயன்படுத்தி வருகிறோம். பாசனத்துக்காக திறக்கும் நீரில் குப்பை கலந்து அசுத்தமாக வருகிறது.
வேறு வழியின்றி அதை பெரியவர்களும், குழந்தைகளும் பருகி வருகிறோம். எங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.