தஞ்சாவூர்: அதிமுகவும், பாஜகவும் ஒருபோதும் கூட்டணியை முறித்துக்கொள்ள மாட்டார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் பாஜக அரசு அறிமுகம் செய்தாலும், உடனடியாக நடைமுறைக்கு வராது என்பது கவலைக்குரிய விஷயம். மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை முடிந்த பின்னர் மகளிருக்கான இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்ற வரையறையுடன் இயற்றப்பட்டுள்ளது ஏமாற்றத்தை அளிக்கிறது.
ஆனால், அதே நேரம் இந்த மசோதா சமூக நீதி வரலாற்றில் ஒரு மைல்கல். அதிமுகவும், பாஜகவும் தற்காலிகமான அரசியல் நாடகம் நடத்துகின்றன. அவர்கள் கூட்டணியை ஒரு போதும் முறித்துக் கொள்ள மாட்டார்கள். அதிமுகவை நம்பி பாஜகவும், பாஜகவை நம்பி அதிமுகவும் உள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் தனித்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை. பாஜகவை சுமக்காமல் தனித்து நின்றாலே, அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
பாஜகவை சுமக்க சுமக்க அதிமுகவின் வாக்குவங்கி மேலும், மேலும் குறையும். முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதி இருந்தால் போதும், தேர்ச்சி பெற தேவையில்லை என அறிவித்துள்ளதால், நீட் தேர்வு செயல் திட்டம் தோல்வியடைந்து விட்டது என்பதை பாஜக ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, அகில இந்திய அளவில், நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்றார்.