தமிழகம்

தமிழகம் முழுவதும் 100 முகாம்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு: அமைச்சர் சி.வி.கணேசன் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி, ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற இலக்கை அடைய சிறப்பு நடவடிக்கைகள் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் அமைச்சர் பேசியதாவது: தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும். கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வேலைவாய்ப்பு துறையால் தமிழகமெங்கும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி இந்த ஆண்டின் இறுதிக்குள் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற இலக்கை அடைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பயனடையும் வகையில், பயிற்சிக் காணொளிகள் ஒளிபரப்பும் திட்டம் முதல்வரால் தொடங்கப்பட்டுள்ளது. இதை அனைத்து போட்டித் தேர்வு ஆர்வலர்களும் பயன்படுத்தி அரசு பணி பெற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை மற்றும் தேர்ச்சி விகிதம் 100 சதவீதத்தை எட்ட வேண்டும்.தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையை உருவாக்குவதுடன், கிராமப்புற மாணவர்கள் தங்களது நிலையை உயர்த்திக் கொள்ளும் வகையிலான திறன் பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இக்கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை செயலர் குமார் ஜெயந்த், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் கொ.வீரராகவராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT