தமிழகம்

கூட்டணி பிரச்சினைகள் குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் முடிவெடுக்கும்: வானதி சீனிவாசன்

செய்திப்பிரிவு

கோவை: கூட்டணி தொடர்பான பிரச்சினைகள் குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்கும் என எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் புதிய நிழற்குடை கட்டுமான பணிகளுக்கான பூஜையை நேற்று தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது: பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும்.

இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும். அதிகமான பெண் உறுப்பினர்கள் வரும்போது பெண்கள் பிரச்சினைகளுக்கு அவர்களின் பார்வையில் இருந்து தீர்வு காணப்படும். இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் பாஜக அரசியல் செய்கிறது என்று சொல்ல திமுக-விற்கு எந்தத் தகுதியும் இல்லை.

கூட்டணி தொடர்பான பிரச்சினைகள் குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்கும். எங்களது கருத்துகளை கட்சி மேலிடத்துக்கு சொல்வோம். அதை ஊடகங்கள் வாயிலாக சொல்வது முறையல்ல. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனித்தனி சித்தாந்தம், கொள்கை இருக்கும். கூட்டணிக்காக மற்றொரு கட்சியின் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. கூட்டணிக்குள் சலசலப்பு வந்தாலும் சரி செய்யப்படும்” என்றார்.

கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, “எந்த தலைவர் சிலையாக இருந்தாலும் அவமதிப்பதை பாஜக ஏற்றுக் கொள்ளாது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதுதான் ஜனநாயகம். அதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இம்மாதிரியான செயல்களுக்கு எங்கள் கட்சியின் ஆதரவு கிடையாது” என்றார்.

SCROLL FOR NEXT