சென்னை: மணல் குவாரிகளை மீண்டும்இயக்க வலியுறுத்தி முதல்வருக்கு லாரி உரிமையாளர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் ஆர்.முனிரத்தினம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் கட்டுமான தொழிலுக்கு சுமார் 9 ஆயிரம் லோடு மணல் தேவைப்படுகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் நாள்ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் லோடு மணல் தேவைப்படுகிறது.
நிலைமை இவ்வாறிருக்க தமிழகம் முழுவதும் அரசு மணல்குவாரிகள் கடந்த 10 நாட்களாக இயங்கவில்லை. இதனால் எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்கள், அரசின் பொதுப்பணித்துறை கட்டுமானம், வீட்டு வசதி வாரியத்தின் 16 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள், பொதுமக்களின் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சில அடுக்குமாடி குடியிருப்புகள் தரமற்ற எம் சாண்ட் பயன்படுத்துவதால் கட்டிடங்கள் இடிந்து விழும் சூழல் உள்ளது.இதனால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். அதே நேரம், இத்தொழிலை நம்பி மணல் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் என 50 லட்சம் பேர் உள்ளனர்.
இவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், கட்டுமானப் பணிகள் தடையின்றி நடைபெறும் வகையிலும் அனைத்து மாவட்டங்களிலும் அதிகளவில் அரசு மணல் குவாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குவாரிகளில் இருந்து நேரடியாக டிப்பர் லாரிகளுக்கு மட்டுமே மணல் தர வேண்டும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மணல் குவாரிகளைத் திறக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும். புதிய மணல் குவாரிகளைத் திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.