தமிழகம்

விழுப்புரம், கடலூரில் 2300+ விநாயகர் சிலைகள் ஊர்வலம்: தேவனாம்பட்டினம், தந்திராயன்குப்பம் கடலில் கரைப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி / விழுப்புரம் / கடலூர்: விழுப்புரம், கடலூர் மாவட்டங் களில் 2300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. புதுச்சேரியில் ஒரு பகுதி விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த செப்டம்பர் 18-ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 1,500 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இது தவிர சிறிய அளவிலான விநா யகர் சிலைகளையும் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.

விநாயகர் சதுர்த்தி முடிந்து 3-வது மற்றும் 5-வது, 7-வது நாட்களில் பூஜிக்கப் பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி விழுப்புரம் நகர்ப் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் தனித் தனியாக வாகனங்களில் ஊர்வலமாக விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன.

பின்னர் அங்கிருந்து அனைத்து விநாயகர் சிலைகளும் டிராக்டர், மினி லாரி, லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டு மகாத்மா காந்தி சாலை, திரு விக வீதி, நேரு ஜி சாலை, கிழக்கு புதுச்சேரி சாலை வழியாக சென்று கடலூர் தேவனாம் பட்டினம் கடலில் கரைக்கப்பட்டன. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

புதுச்சேரியில் இந்து முன்னணி மற்றும் விழா பேரவைசார்பில் செப்டம்பர் 18-ம் தேதி 150-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. பக்தர்களும், பொதுமக்களும் பல பொது இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவி, வழிபாடுகள் நடத்தினர். மேலும், புதுச்சேரியில் பொதுமக்கள், வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கிச் சென்று, வழிபாடு நடத்தினர்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் நேற்று கரைத்தனர். இந்நிலையில் 3-ம் நாளான நேற்று இந்து முன்னணி மற்றும் விழா பேரவை சார்பில் புதுச்சேரியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் மற்றும் தமிழகப் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலைகளை காலாப்பட்டு, நல்ல வாடு உள்ளிட்ட பகுதிகளில் கடலில் கரைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

இதற்காக கனகசெட்டிகுளம், காலாப்பட்டு மற்றும் தமிழக பகுதிகளான கோட்டக்குப்பம், தந்திராயன் குப்பம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், நல்லவாடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்த சிலைகள் என சுமார் 40 சிலைகள் மேளதாளங்களோடு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, புதுச்சேரி காலாப்பட்டு, நல்ல வாடு பகுதிகளில் கடலில் கரைக் கப்பட்டன.

புதுச்சேரி நகரப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை ( செப்.22 ) பழைய நீதிமன்ற வளாகம் எதிரே உள்ள கடலில் கரைக்கப்பட உள்ளன. இதேபோல் கடலூர் மாவட் டத்தில் 600-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலூர் உப்பனாறு, தேவனாம்பட்டினம் கடற்கரை, கொள்ளிடம் ஆறு மற்றும் வெள்ளாறு ஆகிய நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.

ஊர்வலம் மற்றும் சிலை கரைக்கும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடலூர் மாவட்டத்தில் எஞ்சிய இடங்களில் உள்ள விநாயகர் சிலைகள் நாளை நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. காரைக்கால் மாவட்டத்தில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மண்டல ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் முத்துக் குமார், ஜில்லா காரிய வாக் சிவானந்தம்,சக்திமான், ஆர்எஸ்எஸ் காரைக்கால் நகர தலைவர் ராஜேந்திரன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் கணேஷ், நகரத் தலைவர் ராஜ்குமார், பாஜக மாநில துணைத் தலைவர் நளினி கணேஷ், காரைக் கால் மாவட்ட பாஜக தலைவர் துரை சேனாதிபதி மற்றும் பாஜககாரைக்கால் மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT