புதுச்சேரி: புதுச்சேரி கடன் ரூ. 12,595 கோடியாக அதிகரித்துள்ளது. தற்காலிக பணமாக பெறப்பட்டு ரூ. 130 கோடியை பல துறைகளில் திருப்பி செலுத்தவில்லை என்று இந்திய தணிக்கைத் துறைத் தலைவரின் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அரசு துறைகளில் 322 வழக்குகளில் ரூ. 27.98 கோடிக்கு அரசு பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. 7 பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளன. யூனியன் பிரதேச சட்டப்படி இந்திய தணிக்கைத் துறைத் தலைவர் தனது அறிக்கையை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்க துணை நிலை ஆளுநரிடம் அளித்தார்.
கடந்த மார்ச் 2022-ம் ஆண்டுடன் முடிந்த ஓராண்டுக்கான இந்திய தணிக்கைத் துறைத் தலைவரின் நிதித்துறை மீதானதணிக்கை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள் தொடர்பாக தமிழ்நாடு - புதுச்சேரி முதன்மை அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் 2020-21ல் ரூ. 240 கோடியாக இருந்த மூலதன செலவினம் 2021-22ல் ரூ. 163 கோடியாக குறைந்தது. அதனால் நிதிப்பற்றாக்குறை ரூ.1,615 கோடியில் இருந்து, ரூ.1,052 கோடியாக குறைந்தது. 2021-22ல் வருவாய் வரவினங்கள் முந்தைய ஆண்டை விட ரூ. 1,969 கோடியாக அதிகரித்தது.
பொதுப் பணித்துறை, மின்துறைகளில் 34 முடிவடையாத திட்டங்களால் ரூ.114.31 கோடி முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-18ல் ரூ.8,799 கோடியாக இருந்த கடன்கள் 2021-22ல் ரூ. 12,593 கோடியாக அதிகரித்துள்ளது. மறு நிதி ஒதுக்கம் ரூ.10 லட்சத்துக்கு மேல் செய்யப்பட்ட 70 பணிகளில் ரூ. 45.33 கோடி முழுவதும் தேவையற்றதானது. இதில் 15 பணிகளில் எந்த செலவும் செய்யப்படவில்லை.
அரசில் நடந்த 769 பணிகளில் ரூ.502.16 கோடிக்கான பயன்பாட்டுச் சான்றிதழ்கள் நிலுவையில் இருந்தன. இதில் ரூ.37.91 கோடிக்கான199 பயன்பாட்டுச் சான்றிதழ்கள் 9 ஆண்டு காலத்துக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. அதிகாரிகளால் பெறப்பட்ட ரூ.130.7 கோடிக்கான 1,100 தற்காலிக முன்பணங்களுக்கான கணக்குகள் தரப்படவில்லை.
இதில் 10 ஆண்டுகளுக்கு மேலாகரூ. 17.65 கோடிக்கான 296 தற்காலிகமுன்பணங்களின் கணக்குதரப்படவில்லை- சரிசெய்யப்படவில்லை. கணக்கு தணிக்கைக்கு 70ல் 61 அமைப்புகள், குழுமங்கள் கணக்கை தரவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக 17 அமைப்புகள், குழுமங்கள் கணக்குகளை தரவில்லை. இது தொடர்பாக புகாரும் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அரசு துறைகளில் 322 வழக்குகளில் ரூ. 27.98 கோடிக்கு அரசு பணம், முறைகேடு, இழப்பு, களவு மற்றும் கையாடல் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 5 பொதுத் துறை நிறுவனங்கள் ரூ. 38.48 கோடி லாபத்தையும், 7 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ. 49.87 கோடி நஷ்டத்தையும் சந்தித்தன.
புதுச்சேரியில் 12 அரசுத் துறை நிறுவனங்களின் கணக்குகள் இறுதி செய்யப்படாமல் நிலுவையில் உள்ளன என்று தெரிவித்தார். செய்தியாளர் நேர்காணலின் போது, முதுநிலை துணை அக்கவுன்டன்ட் ஜெனரல் வர்ஷினி அருண், முதுநிலை ஆடிட் அதிகாரிகள் மெய்யப்பன், மணி மொழி ஆகியோர் உடனிருந்தனர்.