செங்கல்பட்டு: தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள, 10 முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி, 15 நாட்களுக்குள்பட்டியலை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவையுங்கள் என அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு கடிதம் எழுதி இருந்தார்.
பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை தீர்ப்பதற்காக ஆகும் செலவினம் மற்றும் அதற்கான நிதியும்ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் எம்எல்ஏவான அதிமுகவை சேர்ந்த கு. மரகதம், ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத்திடம் மனு அளித்திருந்தார்.
அதில், அச்சிறுப்பாக்கம் தனி வட்டம் அமைக்க வேண்டும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும், படாளம் முதல் உதயம்பாக்கம் வரையிலான பாலாற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய மேம்பாலம் அமைக்க வேண்டும், நெல்லி, சூரை அண்டவாக்கம், நெல்வாய், குமாரவாடி வேடவாக்கம், கோடி, தண்டலம் ஆகியஊராட்சிகளில் பாலாற்று கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும், தேசிய நெடுஞ்சாலை மதுராந்தகம் மோச்சேரி பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.
மேலும், சிட்கோ தொழில்பேட்டை, கிளியாற்றின் குறுக்கே பெரும்பாக்கம் கிராமத்தில் தடுப்பணை, பாக்கம், கெண்டிராச்சேரி ஊராட்சியில் ஏரிக்கரை சாலை, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்துதல், செம்பூண்டிஊராட்சியில் ஏரியின் மதகை மேம்படுத்துதல், அச்சிறுப்பாக்கம் ஆரம்ப சுகாதாரநிலையத்தை தரம் உயர்த்தி மருத்துவமனையாக மாற்றுதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அந்த மனுவில் பட்டியலிட்டு அளித்திருந்தார். ஆனால் இதில் எந்த கோரிக்கை மீதும் ஒரு சதவீத நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை என்று எம்எல்ஏ மரகதம் ஆதங்கம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியது: பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் முதல்வர் அறிவுரையின்படியே வழங்கப்பட்ட மனு மீது இந்நாள்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்களின் தேவை அறிந்தே அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை மனுவாக அளித்தேன். இந்த மனு மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
நான் அளித்த கோரிக்கை மனுவில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த மக்கள் கோரிக்கையை மட்டும் நிறைவேற்றினால் கூட போதுமானது. இவ்வாறு தெரிவித்தார்.