மத்திய அரசின் பட்ஜெட்டில் பெரும்பாலும் வரவேற்கத்தக்க அம்சங்களே உள்ளன என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
மத்திய அரசின் முதல் நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்துள்ளார். இந்த நிதிநிலை அறிக்கை, பொதுவாக வரவேற்கப்பட வேண்டிய பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
கிராமங்களில் விவசாய விளை பொருள்களைச் சேமித்து வைக்க குளிர்ப்பதன கிடங்குகள் அமைக்க, ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
எதிர்பார்த் ததைப் போலவே சிகரெட் மீதான சுங்கவரி 11 சதவீதத்திலிருந்து 72 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகை, ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.2 லட்ச மாக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தொலைக் காட்சிப் பெட்டிகளில் பயன்படுத்தும் பிக்சர் டியூப் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதால், தொலைக்காட்சி பெட்டிகளின் விலை குறையும். மின்னணு சாதனங்கள் மீதான வரிகள் குறைக்கப்படுவதால், கம்ப்யூட்டர்கள் விலையும் குறையலாம்.
உழவர் சந்தை போல, விவசாயி கள் தங்கள் விளை பொருள்களை விற்பதற்கான சந்தைகள் நாடெங்கும் அமைக்கப்படும் என்றும், மாநில அரசுகள் அவ்வாறு உழவர் சந்தைகளை மேம்படுத்த ஊக்கம் தரப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்திருப்பது மகிழ்ச்சியானது.
புதிதாக 100 நகரங்களை உருவாக்கவுள்ளதாக அறிவித் திருப்பது, கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடியேறும் மக் களுக்கு பேருதவியாக அமையும். தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில் ஜவுளிப் பூங்கா அமைக்க, ரூ.200 கோடி நிதி ஒதுக்கியிருப்பதும், தமிழகத்தில் சோலார் திட்ட மையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பதும் மகிழ்ச்சி.
ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் இந்த நிதி நிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அறிவிப்புகளே அதிகமாக உள்ளன.