சென்னை: இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு கடந்த 15-ம் தேதி முதல், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மாதாமாதம் ஒரு கோடிக்கும் கூடுதலான பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்பது அவர்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு நம்பிக்கையை, நிம்மதியை ஏற்படுத்தும்.
ஆனால், வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு இல்லை, குறுஞ்செய்திக் கட்டணம் ஆகிய காரணங்களுக்காக, கணிசமான எண்ணிக்கையிலான பெண்களின் கணக்குகளிலிருந்து அவர்களுக்குச் சேர வேண்டிய ஆயிரம் ரூபாயில் பெரும்பாலான தொகையோ, முழுவதுமோ அபராதத் தொகையாக பிடித்தம் செய்துள்ளன என்று தெரியவருகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளில் ரூ.35 ஆயிரம் கோடி சாமானிய மக்களிடம் இருந்து அபராதக் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக நிதிஅமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் இந்த கட்டாய அபராதத் தொகை வசூலை வன்மையாகக் கண்டிக்கிறது.
சாமான்ய மக்களிடமிருந்து எந்த அபராதக் கட்டணமும் வசூல் செய்யக்கூடாது என்பதே இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் நிலைப்பாடு. தற்போது தமிழக அரசின் இத்திட்டத்தை செயல்பட விடாமல் தடுக்கும் வகையில், பயனாளிகளுக்கு அவர்களின் உரிமைத் தொகை கிடைக்க விடாமல் வங்கிகள் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இதை உடனடியாக சரி செய்து, அனைத்து பெண்களுக்கும் அவர்களின் உரிமைத் தொகையை முழுமையாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று வங்கி நிர்வாகங்களை கேட்டுக் கொள்கிறோம்.