சென்னை வால்டாக்ஸ் சாலை ஜட்காபுரத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் விளக்கினார் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன். 
தமிழகம்

டெங்கு காய்ச்சல் சிறப்பு முகாம்களால் 1.13 லட்சம் பேர் பயன்: சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: டெங்கு காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களால் 1.13 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னை ராயபுரம் வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஜட்காபுரத்தில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்து, டெங்கு கொசு உற்பத்தியாகும் முறையைத் தடுக்கும் வழிமுறை குறித்து அமைக்கப்பட்டுள்ள மாதிரிக் கண்காட்சியைப் பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மழைக் காலங்களில் கொசுக்களால் பரவும் நோய்களை ஆரம்ப நிலையிலே கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஒரு நாளைக்கு 50 தெருக்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, சிகிச்சை வழங்கப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்டுள்ள 3,390 மருத்துவ முகாம்கள் மூலம் 1.13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

பொதுமக்கள் 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், தன்னிச்சையாக மருந்துகளை உட்கொள்ளாமல், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று, உரிய சிகிச்சை பெற வேண்டும்.

சென்னையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 297 பேருக்கு டெங்கு பாதிப்புஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும், மீதமுள்ள 3 மாதங்களுக்கு கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதிகளில் டிரம்களில் சேகரித்து வைக்கப்படும் தண்ணீர், காலிமனைகளில் காணப்படும் குப்பை, கட்டுமானங்கள் நடைபெறும் இடங்களில் மழைநீர் தேக்கம் போன்றவற்றில் இருந்தும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும். எனவே, பொதுமக்கள் தண்ணீர்த் தொட்டிகளை முழுமையாக மூட வேண்டும்.

கொசுப்புழுக்களை ஒழிக்க மாநகராட்சி சார்பில் கைகளால் இயக்கப்படும் 424 கம்ப்ரஷன் ஸ்ப்ரேயர்கள், 120 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரியால் இயக்கப்படும் 300 இயந்திரங்கள், 324 கை புகை தெளிப்பான்கள், ஒரு மினி புகைத்தெளிப்பான், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள 68 புகைப் பரப்பும் இயந்திரங்கள், பைரித்திரம், டெக்னிக்கல் மாலத்தியான், அபேட், கொசு லார்வா எண்ணெய் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல, 1,489 கிலோ நிலவேம்பு குடிநீரும், 200 கிலோ கபசுரக் குடிநீரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் நேற்று (செப்.16) 8 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. எனினும், சுரங்கப் பாதைகளில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 30-ம் தேதிக்குள் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, வடக்கு வட்டார துணை ஆணையர் எம்.சிவகுரு பிரபாகரன், கூடுதல் மாநகர நல அலுவலர் மகாலட்சுமி மற்றும் பூச்சியியல் நிபுணர்கள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT