சென்னை: சென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் வைக்கப்பட்ட பெரியார் உருவப்படத்துக்கு ஒபிஎஸ் மரியாதை செலுத்தியதால், அந்த உருவப்படத்துக்கு மரியாதை செலுத்த மறுத்த அதிமுகவினர், வேறொரு பெரியார் படத்தை வைத்து மரியாதை செலுத்தினர். இதனால், அங்கு சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் உள்ள பெரியார் சிலைக்கு, தமிழக பொதுப் பணித்துறை சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த சிலைக்கு அதிமுக தரப்பிலும், ஓபிஎஸ் அணி தரப்பிலும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தரப்பிலும் மாியாதை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அண்ணா மேம்பாலத்தின் கீழ் உள்ள பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு ஒபிஎஸ் தரப்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதன்பின்னர், அதிமுக சார்பில், பெரியாருக்கு மரியாதை செலுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்ளிட்டோர் வந்தனர். அவர்கள், ஓபிஎஸ் மரியாதை செலுத்தி படத்துக்கு மரியாதை செலுத்த மறுப்பு தெரிவித்தனர். பின்னர், அவர்கள் கொண்டு வந்திருந்த பெரியார் படத்தை வைத்து அதற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த அதிமுக நிர்வாகிகள் பலரும் புதிதாக வைக்கப்பட்ட பெரியார் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.