தமிழகம்

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கும் வாய்ப்பு: அமைச்சர் உதயநிதி உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் நேற்று தொடங்கிவைத்தார். சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்ற விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்று, தொகுதி பயனாளிகளுக்கு வங்கி ஏடிஎம் அட்டைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ‘‘பெண்கள் முற்போக்காக, சுதந்திரமாக சிந்திக்கவும், படிக்கவும் ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தால்தான் வீடும், சமுதாயமும், நாடும் முன்னேறும். அதற்காகத்தான் இந்த உரிமைத் தொகை திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது’’ என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்திட்டத்தின்கீழ் விடுபட்டவர்கள், பயனாளியாக வருவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

சைதாப்பேட்டை தொகுதியில் நடைபெற்ற விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொளத் தூர் தொகுதியில் நடைபெற்ற விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர்பயனாளிகளுக்கு ஏடிஎம் அட்டைகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிகளில் மேயர்ஆர்.பிரியா, எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஆ.வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், இ.பரந்தாமன், பிரபாகர் ராஜா, துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் எஸ்.கே.பிரபாகர், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை செயலர் தாரேஷ் அகமது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT