சென்னை: சைபர் கிரைம் கூடுதல் காவல்துறை இயக்குநர் சஞ்சய்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பேடிஎம் உள்ளிட்ட பிரபல டிஜிட்டல் பரிவர்த்தனை தளத்தில் இருந்து அழைப்பதாக கூறி, செல்போன் எண்ணுக்கு பல ஐவிஆர் அழைப்புகள் வருகின்றன. பரிவர்த்தனை தளத்தில் உள்ள ‘இ-வாலட்’ ஐ புதுப்பிக்க கோரி,புதுப்பிக்கவில்லை என்றால், குறிப்பிட்ட எண்ணை அழுத்த ஐவிஆர்அழைப்பில் அறிவுறுத்தப்படுகிறது.
அப்போது செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணை, ஐவிஆர் அழைப்பில் இருக்கும்போதே, உள்ளீடு செய்ததும், அழைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டு, ‘இ-வாலட்டில்’ உள்ள பணம் முழுமையாக எடுக்கப்பட்டு விடுகிறது. கடந்த ஒருமாதத்தில் மட்டும் இதுபோன்று 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
‘ஐவிஆர்’ அழைப்புகள் வரும்போது, குறிப்பாக நமது தனிப்பட்ட தகவல்களை கேட்கும்போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணை எக்காரணம் கொண்டும் யாருக்கும் பகிரவும் கூடாது,
மேலும், பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த நிறுவனத்தில் இருந்து குறுஞ்செய்தி வருவதுபோல் தோன்றினாலும், அதன் உள்ளடக்கத்தை கவனமாக ஆராய வேண்டும். சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தனைகள் நடக்கும்போது, தங்களின் வங்கி அறிக்கையை தவறாமல் ஆய்வு செய்ய வேண்டும். இதுபோன்ற மோசடிகளுக்கு ஆளாகி இருந்தால், பொதுமக்கள் 1930 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.