சென்னை: திருவண்ணாமலையில் ஏரி, பாசன கால்வாயை ஆக்கிரமித்து தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் கட்டப்பட்டு இருந்தால் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்ததையடுத்து, இந்த வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நாச்சிப்பட்டு மற்றும்தென்மாத்தூர் இடையே உள்ள ஏரி, பாசன கால்வாய் அப்பகுதி மக்களின் விவசாய மற்றும் குடிநீர்தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த ஏரி, பாசன கால்வாயை ஆக்கிரமி்த்து தனியார் பொறியியல் கல்லூரியின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனால் இயற்கையாக இருந்த நீர்வழித்தடம் மாறியுள்ளது.
ஏரி நீரை ஆதாரமாகக் கொண்டுஇருப்பவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரியின் கழிவு நீரும் ஏரியில் கலக்கிறது. இந்த ஏரி, பாசன கால்வாய் பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் செல்லமுடியாதபடி கல்லூரி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த ஏரி,பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த ஜூன் மாதம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனதுமனு மீது உரிய நடவடிக்கை எடுக்கமாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.மகேஸ்வரி ஆஜராகி, ஏரி பாசனகால்வாயை தனியார் கல்லூரி நிர்வாகம் ஆக்கிரமித்து சுற்றுச்சுவரை கட்டியுள்ளதால் நீர்வழித்தடம் தடைபட்டு, அதை நம்பியிருப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
அப்போது மாநில அரசு ப்ளீடர்பி.முத்துக்குமார் ஆஜராகி, மனுதாரர் குறிப்பிடுவதுபோல தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் ஆக்கிரமிப்பில் இருப்பதாக வட்டாட்சியர் தலைமையிலான குழுவின் களஆய்வில் தெரியவந்தால், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தமிழக அரசின் இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.