நாகர்கோவில்: “தனியாருக்கு சாதகமாக ஆவின் நெய் விலை உயர்த்தப் படவில்லை” என அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார்.
பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தனியார் நெய் ஒரு கிலோ ரூ.960-க்கு விற்பனை ஆகிறது. ஆனால் ஆவினில் அதிகபட்சமாக விலையை உயர்த்திய பிறகும் கூட ரூ. 700-க்கு விற்பனை செய்கிறோம். இதை விலை உயர்வு என்று கூறமுடியாது. பால் கொள்முதலில் விவசாயிகள் பாதிக்கப்படாத அளவுக்கு விலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் தனியாருக்கு சாதகமாக ஆவின் நெய் விலை உயர்த்தி இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அப்படி என்றால் விவசாயிகளுக்கு உரிய பணம் கொடுக்க வேண்டாம் என்கிறார்களா? தனியார் நெய் விற்கும் விலை குறித்து அவருக்கு தெரியாதா? இவ்வாறு அவர் கூறினார்.