திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கரோனா தொற்று காலத்தில், நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீரை பலரும் தொடர்ந்து பருகியதால் டெங்கு காய்ச்சலின் தாக்கம் கடந்த 3 ஆண்டுகளாக குறைந்திருந்தது. மேலும், பொதுமக்களும், தங்களின் இருப்பிடத்தை சுகாதாரமாக வைத்திருந்தனர்.
இதேபோல், சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி துறையினர் இணைந்து ஒவ்வொரு பகுதியிலும் தூய்மை மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். இந்நிலையில், பொதுமக்கள், சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி துறையினரின் மெத்தனம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, பெய்து வரும் மழையால், டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இதர வகை காய்ச்சலும் பரவி வருகிறது. இதில் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட் டுள்ளனர். இதனால், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர் நல மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இதேபோல், டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் சிலரும் வருவதால், அவர்களது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோ தனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் மக்கள் அச்ச மடைந்துள்ளனர்.
நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையை தீவிரம் காட்டாமல் சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி துறையினர் உள்ளனர். டயர், தேங்காய் கூடு, உரல், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றில் தேங்கிக்கிடக்கும் தண்ணீர் மூலம் டெங்கு காய்ச்சல் பரவும் என கடந்த காலங்களில் அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும், இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. கள பணி யாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், தற்போது, டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கிவிட்ட நிலையில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் வேகம் காட்டாமல் உள்ளனர்.
எனவே, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தனிக் கவனம் செலுத்தி, டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.