சென்னை: "விஜயலட்சுமி என்னுடைய படத்தில் நடித்தவர். என் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்துள்ளார். வீரலட்சுமி யார்? வீரலட்சுமிக்கு இதில் என்ன வேலை? என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சான்றுகள் இருக்கிறதா என ஊடகங்களும், காவல் துறையும் கேட்கவில்லை" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் போலீஸார் ஆஜராக சம்மன் அனுப்பியிருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியது: "நம்மூர்ல கூறுவார்களா பொட்டு வெடி, சீனி வெடி, அதுபோல இரண்டு லட்சுமி வெடியை வைத்து பெரிய மலையை தகர்க்கலாம் என்று நினைக்கிறார்கள்.
காவல் துறையினர் வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்யும் வேண்டும். அதற்காக சம்மன் அனுப்பியுள்ளனர். இரண்டு முறை அல்ல இருபது முறைகூட அனுப்பட்டும். 2011-ல் கொடுத்த குற்றச்சாட்டு. இப்போது புதிதாக யாரும் அந்த காவல் துறையில் பணிக்குச் சேரவில்லையே? இப்போது சம்மன் அனுப்பியுள்ள இந்த காவல் துறை, புகார் கொடுத்தபோது சம்மன் அனுப்பாமல் என்ன செய்து கொண்டிருந்தது? 13 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தது? அவர்கள் வேறு வேலைக்கு ஏதாவது சென்றிருந்தார்களா? இவ்வளவு காலம் அனுப்பாமல் எங்கே சென்றனர்? எனவே, தமிழக முதல்வருக்கும் அவருடைய மகன் இளவரசருக்கும் நான் சொல்வது, எதையும் நிரந்தரம் என்று நினைத்துக் கொண்டு ஆடாதீர்கள். எல்லா வினைக்கும் எதிர்வினை உண்டு" என்றார்.
அப்போது, சீமான் அவரது மனைவியுடன் வரவேண்டும் என்று வீரலட்சுமி கூறியிருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "விஜயலட்சுமி என்னுடைய படத்தில் நடித்தவர். என் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்துள்ளார். வீரலட்சுமி யார்? வீரலட்சுமிக்கு இதில் என்ன வேலை? என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சான்றுகள் இருக்கிறதா? ஊடகங்களும், காவல் துறையும் கேட்கவில்லை.
ஒருவேளை நாம் தமிழர் கட்சியினர் ஒருநாள் அவரை தாக்கிவிட்டால், சட்டம் - ஒழுங்கை சீமான் கெடுத்துவிட்டதாக கூறுவீர்களா? வீரலட்சுமி யார்? அவர் கூறுகிறார், ஒரு துணை நடிகைக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து செட்டில் செய்துவிட்டதாக கூறுகிறார். அந்த துணை நடிகை யார் தெரியுமா? வீரலட்சுமிதான். எதற்காக அவருக்கு இவ்வளவு கோபம்? செட்டில்மென்ட்டின்போது அவருக்கு காசு குறைவாக கொடுத்துவிட்டேன். அந்தக் கோபத்தில் அவர் கத்திக் கொண்டிருக்கிறார். என்னைப் பற்றி அவர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார். நான் யாரென்று நினைத்துக் கொண்டு எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். யூடியூப் சேனல்களில் உட்கார்ந்து கொண்டு வீரலட்சுமி ஏதேதோ பேசுகிறார்.
நான் ஜனநாயகவாதியாக இருப்பதுதான் உங்களுக்கு பிரச்சினை. நான் யாரென்று தெரியுமா? கேடுகெட்ட ரவுடி நான். என்னுடைய பிள்ளைகளை பலியிட நான் தயாராக இல்லை. என்னை ஸ்கெட்ச் போட்டு தூக்குவதாக வீரலட்சுமி கூறுகிறார். ஸ்கெட்ச் பேனாவை தூக்க முடியுமா அவரால்? சிரிக்க சிரிக்க பேசுவதாக நினைத்துவிடாதீர்கள். ரொம்ப சீரியஸான ஆளு நான். கட்சியாவது கிட்சியாவது என்று வெட்டி எறிந்துவிட்டு போய்கொண்டே இருப்பேன். வீரலட்சுமி யார் என்று ஒரு ஊடகம் கேட்கவில்ல. ஒரு காவல் துறை அதிகாரி கேட்கவில்லை. என்னை சிறையில் வைத்துவிட்டால், விஜயலட்சுமிக்கு நீதி கிடைத்துவிடுமா?" என்று ஆவேசமாக பேசினார்.