நிலுவை சம்பளத்தைப் பெற்றுத்தரக் கோரி, நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க குழந்தைகளுடன் திரளாக வந்த தனியார் நூற்பாலை தொழிலாளர்கள். 
தமிழகம்

நிலுவைச் சம்பளத்தை பெற்றுத்தரக் கோரி நாமக்கல் ஆட்சியரிடம் நூற்பாலை தொழிலாளர்கள் மனு

செய்திப்பிரிவு

நாமக்கல்: நிலுவை சம்பளத்தைப் பெற்றுத் தரக்கோரி, நாமக்கல் ஆட்சியரிடம் வெப்படையில் உள்ள நூற்பாலை தொழிலாளர்கள் மனு அளித்தனர்.

பின்னர் அவர்கள் கூறியதாவது: திருச்செங்கோடு அருகே வெப்படை வால் ராசாம்பாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. இது தொடர்பாக கேட்டால், தொழிலாளர்கள் ஆலையில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என கூறுகின்றனர்.

சம்பளம் வழங்கினால் தான் பெற்ற கடன் தொகையைச் செலுத்த முடியும். மேலும், வேறு ஆலைக்கும் வேலைக்கு செல்வதையும் தடுத்து வருகின்றனர். எனவே, எங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைச் சம்பளத்தைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வேறு இடங்களில் பணிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து, மனு அளித்த தொழிலாளர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

SCROLL FOR NEXT