நத்தம்: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வெற்றி தேடித் தர வேண்டும். மோடியை 3-வது முறையாக ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
நத்தம், திண்டுக்கல்லில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ நடைபயணம் மேற்கொண்டார். நத்தம் பள்ளபட்டி விலக்கு பகுதியில் நடை பயணத்தை தொடங்கிய அவர், புளிக்கடை ஸ்டாப், கோவில்பட்டி வழியாக நத்தம் பேருந்து நிலையம் பகுதியை அடைந்தார்.
அங்கு அவர் பேசியதாவது: திண்டுக்கல்லுக்கு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. மதுரை-நத்தம் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழகத்திலேயே மிகவும் நீளமான பாலத்தை தந்துள்ளார் பிரதமர். எந்த பிரச்சினைக்கும் திமுக அரசு தீர்வு காண்பதில்லை. தண்ணீர் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.
சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தென் தமிழகத்தில் கடந்த 21 நாட்களில் 41 கொலைகள் நிகழ்ந்துள்ளன. மதுபான விற்பனையால் ஒரே ஆண்டில் ரூ.44 ஆயிரம் கோடி மாநில அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. மது விற்றுத்தான் அரசை நடத்த வேண்டும் என்ற நிலை இல்லை. திமுகவினரின் சாராய ஆலைக்காக டாஸ்மாக் தேவைப்படுகிறது.
திமுக தலைவர்களான டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோரின் நிறுவனங்களில் இருந்துதான் 40 சதவீத மதுபானங்கள் விற்பனைக்கு வருகின்றன. தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக மாற்றுகிறேன் என்று கூறினர். ஆனால், நாட்டிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது. ஒவ்வொருவர் மீதும் ரூ.3 லட்சத்து 55 ஆயிரம் கடன் உள்ளது. தமிழகத்தில் 2.5 கோடி குடும்பத் தலைவிகள் உள்ள நிலையில், 1 கோடி பேருக்கு மட்டும் உரிமைத் தொகையை வழங்குகின்றனர்.
2014-க்கு பிறகுதான் மத்திய அரசின் திட்டங்கள் ஏழை மக்களின் வீடு தேடி வந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வெற்றி தேடித் தர வேண்டும். அவரை 3-வது முறையாக ஆட்சியில் அமர வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து திண்டுக்கல் நாகல் நகரில் நடை பயணத்தை தொடங்கிய அண்ணாமலை, நேற்று இரவு மணிக் கூண்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார்.