கடலூர்: காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அக்கி நோயால் முகம் சேதமடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அந்த சிறுவனுக்கு மீண்டும் முகம் பொலிவு பெற்றது.
காட்டுமன்னார் கோவிலில் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுவன் அக்கி நோயால் அண்மையில் பாதிக்கப்பட்டார். சிறுவனின் பெற்றோர் அதன் முகத்தில் மண்ணால் கோடு போடுவது என கிராம பழக்க வழக்கத்தை பின் பற்றினர். இதனால் சிறுவனின் முகத்தில் அக்கியால் காயங்கள் அதிகரித்தன.
ஆபத்தான நிலையில் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி அந்த சிறுவன் அனு மதிக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையால் அந்த சிறுவனுக்கு முகத்தில் இருந்த காயங்கள் நீக்கி முகம் பழைய நிலைமைக்கு திரும்பியது.
இது குறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ரவி சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தைகளுக்கு அக்கி ஏற்பட்டவுடன் தோற்று விக்கப்படும் பாக்டீரியா ரத்தத் தோடு கலந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கிராம வைத்திய முறைகளை பின்பற்றாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
அக்கியால் பாதிக்கப்பட்டு காட்டுமன்னார்கோவிலில் அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ஓர் சிறுவன் அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுவனுக்கு முதுநிலை மருத்துவர் ஜெயசெல்வி, குழந்தைகள் நல மருத்துவர் வரதராஜன், தோல் நோய் மருத்துவர் நிஷா, கண் மருத்துவர் சரண்யா ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் தொடர் சிகிச்சை அளித்தனர். ஆபத்தான நிலையில் இருந்த அந்த சிறுவனுக்கு சிகிச்சைக்கு பின்னர் பழைய முகத்தோற்றம் திரும்ப வந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.