தமிழகம்

11 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த வழக்கு; வியாபாரிக்கு விதிக்கப்பட்ட10 ஆண்டு சிறை ரத்து: 5 ஆண்டுகளை சிறையில் கழித்தார்

செய்திப்பிரிவு

மதுரை: 11 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் மரபணுச் சோதனை ஒத்துப்போகாததால் கைதான வியாபாரிக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டு சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன்(48), பழ வியாபாரி. 2018-ம் ஆண்டு 13 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் உறவு கொண்டதில் அந்தச் சிறுமி கர்ப்பமானதாகவும், பின்னர் சிறுமிக்கு பெண் குழந்தை பெற்றதாகவும் மாரியப்பன் மீது ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாரியப்பனை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இந்த வழக்கு திருவில்லிபுத்தூர் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு மாரியப்பனுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தண்டனையை ரத்து செய்யக்கோரி மாரியப்பன் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்து நீதிபதி கே.முரளிசங்கர் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் குழந்தைக்கு நடத்தப்பட்ட மரபணு பரிசோதனை முடிவு மாரியப்பனுக்குச் சாதகமாக உள்ளது. குழந்தைக்கு நடத்தப்பட்ட மரபணு சோதனையும் மாரியப்பனுடன் ஒத்துப்போகவில்லை. அந்தக் குழந்தையின் உண்மையான தந்தை மாரியப்பன் இல்லை எனத் தெரிந்துள்ளது. இருப்பினும் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க போலீஸார் முயற்சி மேற்கொள்ளாதது வேதனையானது.

சிறுமிக்கு பிறந்த குழந்தையின் ரத்த மாதிரிகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், சந்தேகப்படும் நபர்களை போலீஸார் மரபணுச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மாரியப்பனுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனை ரத்து செய்யப்படுகிறது. உண்மையான குற்றவாளிகளை 4 மாதத்தில் கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டுள்ள மாரியப்பன் போக்சோ சட்டத்தில் கைதாகி கடந்த 5 ஆண்டுகளாக சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT