சென்னை: மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தில் 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க, ரூ.4,058.20 கோடியில் 3 ஒப்பந்தங்கள் ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன.
பல்வேறு இடங்களில் மெட்ரோ நிலையங்கள், பாதைகள் அமைக்க ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. அந்த வகையில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தில் 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துக்கு 3 ஒப்பந்தங்கள் ரூ.4,058.20 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது
இந்த ஒப்பந்தம் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதியுதவியின் ஒரு பகுதியாகும். இதற்கான ஏற்பு கடிதம் ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துக்கு கடந்த ஜூன் 20-ம் தேதி வழங்கப்பட்டது. இந்நிலையில், ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் தலைமையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் தி. அர்ச்சுனன் (திட்டங்கள்) மற்றும் ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் தலைமை திட்ட மேலாளர் கமலாகர ரெட்டி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இந்த 3 ஒப்பந்தங்களும் கீழ்ப்பாக்கம் மெட்ரோவில் இருந்து தரமணி வரை 12 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான அனைத்து வகையான பணிகள் மற்றும் 4 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் சுவர் தவிர மற்ற கட்டுமான பணிகளை உள்ளடக்கியது. இவ்வாறு அவர்கள் கூறினர்.