தமிழகம்

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி: தேனி மாவட்ட எல்லையில் கண்காணிப்பு மும்முரம்

செய்திப்பிரிவு

கூடலூர்: கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவத் தொடங்கியதை அடுத்து தேனி மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளத்தில் 2019, 2021-ல் நிபா வைரஸ் பரவல் ஏற்பட்டது. அப்போது சிலர் உயிரிழந்தனர். இந்நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரை, ஆயஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 2 பேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து கோழிக்கோடு மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக - கேரள எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவிட்டார்.

தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன்படி கேரள எல்லைப் பகுதிகளான கம்பம் மெட்டு, குமுளி ஆகிய பகுதிகளில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் நேற்று முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

கம்பம்மெட்டு அடிவாரப் பகுதியில் மருத்துவர் சிராஜுதீன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் முரளி, தினேஷ் குமார் அடங்கிய குழுவினர், கேரளாவிலிருந்து வருபவர்களிடம் காய்ச்சல், உடல் சோர்வு அறிகுறிகள் உள்ளதா என பரிசோதனை செய்து வருகின்றனர். இதேபோல் கம்பம் மெட்டிலும் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT