நாட்றாம்பள்ளி: நாட்றாம்பள்ளி அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடை பெறுவதால் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடந்து ஆபத்தான முறையில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம் பச்சூர் பகுதியில் முன்னாள் முதல்வர் காமராஜரால் கடந்த 1957-ம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளி திறக்கப்பட்டது. இந்த பள்ளியில் தற்போது 90 மாணவிகள் உட்பட 550 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கொத்தூர், நாட்றாம்பள்ளி, பச்சூர், சொரக்காயல்நத்தம், பண்டாரப்பள்ளி, பழைய பேட்டை, அரசம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்தும், தமிழக-ஆந்திர மாநில எல்லை பகுதியான கொண்டகிந்தனப்பள்ளி, மல்லனூர், குடுபள்ளேமண்டல், சித்தூர் மாவட்டம் ராமகுப்பம் போன்ற தொலைதூரத்தில் உள்ள மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர்.
ரயில்வே தண்டவாளத்தை கடந்த பள்ளி வளாகம் உள்ளதால் ஆபத்தை உணராமல் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடந்து மாணவர்கள் பள்ளி வளாகத்தை அடைகின்றனர். சில நேரங்களில் சரக்கு ரயில்கள் இங்கு நிறுத்தப்பட்டால் ரயில் சக்கரத்தின் அடியில் நுழைந்தும், மேலே ஏறியும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது. இந்த வழித்தடத்தில் அடிக்கடி சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் சென்று வருவதால் மாணவ, மாணவிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுவதாக பெற்றோர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பச்சூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘பச்சூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அங்குள்ள ஆளில்லா லெவல் கிராசிங்கை கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் ஒன்று கட்டித் தர வேண்டும். அல்லது சுரங்கப்பாதை கட்டித் தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தோம். அதனடிப்படையில், பச்சூர் பகுதியில் தெற்கு ரயில்வே நிர்வாகமும், மாநில நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து பச்சூர் ரயில் தண்டவாளம் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின.
ஆமை வேகம்: இப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் ஆபத்தை உணராமல் மாணவர்கள் பழையபடி ரயிலை கடந்தும், தண்டவாளத்தை கடந்தும் பள்ளிக்கு சென்று வரும் நிலை தொடர்கிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது’’ என்றனர்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் கூறும்போது, ‘‘ரயில் தண்டவாளத்தை கடந்து பள்ளிக்கு யாரும் வரக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். ஆனால், ஒரு சில மாணவர்கள் கேட்பதில்லை. எனவே, ரயில் தண்டவாளம் அருகே ஆசிரியர்களை நிறுத்தி மாணவ, மாணவிகளை கண்காணிக்கவும், ஒழுங்குப்படுத்தவும் முயற்சித்து வருகிறோம். சுரங்கப்பாதை பணி களை துரிதப்படுத்தினால் மட்டுமே இதற்கான நிர்ந்தர தீர்வு கிடைக்கும்’’ என்றார்.
இதுகுறித்து மாநில நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் அண்ணாமலை, 'இந்து தமிழ் திசை நாளிதழிடம்' கூறும்போது, ‘‘பச்சூர் பகுதியில் சுரங்கப்பாதை பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. சில, பல காரணங்களால் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தள்ளி வைக் கப்பட்டுள்ளன. சுரங்கப்பாதை பணிகள் விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்து வருகிறோம்’’ என்றார்.