2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டது குறித்து, நீதி வெல்லும், காத்திருப்போம் என்று பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (டிச. 21 2017) தீர்ப்பு வழங்கியது. ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் நிரூபிக்க அரசு தரப்பு தவறி விட்டதாக நீதிபதி தெரிவித்தார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹெச்.ராஜா, ‘’குன்ஹா தீர்ப்பை கொண்டாடியவர்கள் உண்டு. குமாரசாமி தீர்ப்பால் குதூகலமானவர்களைப் பார்த்தோம். இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் நீதி வென்றது. 2ஜி வழக்கில் CBI, ED மேல்முறையீடு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் உரிமங்களை ரத்து செய்ததே ஊழலுக்கு ஆதாரம். நீதி வெல்லும். காத்திருப்போம்.
CAG அறிக்கை வந்தது, உச்ச நீதிமன்றம் 2ஜி உரிமங்களை ரத்து செய்தது, 2011 ல் இந்த வழக்கு தொடரப்பட்டது அனைத்தும் நடந்தது காங்கிரஸ் ஆட்சியின் கீழ். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசியல் ரீதியாக பா.ஜ.க மீது குற்றம் சாட்டுவது சிறுபிள்ளைத் தனமானதாகும்’’ என்று பதிவிட்டுள்ளார்.