சென்னை: வீரராகவன் ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்றி, மாசுபாடற்ற நிலையை 6 மாதங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
குரோம்பேட்டையைச் சேர்ந்த சாலமன் ராஜா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மழைநீர் வடிகாலில் கலக்கப்படுகிறது. அந்த கழிவுநீர் சென்று வீரராகவன் ஏரியை மாசடையச் செய்கிறது. இதன் மூலம் ஏற்படும் சுகாதார சீர்கேடு காரணமாக அப்பகுதி முழுவதும் வாழ்வதற்கே தகுதியற்ற இடமாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க தாம்பரம் மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த தீர்ப்பாய உறுப்பினர்கள் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, கே.சத்யகோபால் அமர்வு பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
துர்கா நகர், செல்லியம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மழைநீர் வடிகாலில் கலப்பதில்லை என்பதை தாம்பரம் மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும்.
கழிவுநீரால் மாசடைந்திருக்கும் ஏரியில் உள்ள பதுமராக செடிகளை நீர்வளத் துறை மற்றும் தாம்பரம் மாநகராட்சி அகற்ற வேண்டும். ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றி, சம்பந்தப்பட்டவர்களை மறுகுடியமர்வு மற்றும் ஏரியை மாசுபாடில்லாமல் இருப்பதற்கான நடவடிக்கையை வருவாய் கோட்டாட்சியர், காவல்துறை, மாநகராட்சி, மின்வாரியம் உள்ளிட்ட துறைகள் மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவுகளை 6 மாதங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.