தரமற்ற முறையில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதாக சமூக வலை தளங்களில் வீடியோ வைரலாகியுள்ளது. 
தமிழகம்

திமிரி அடுத்த பழையனூர் கீழ்ப்பாடி கிராமத்தில் தொட்டால் உதிரும் கால்வாய் சுவர்: அதிகாரிகள் ஆய்வு

செய்திப்பிரிவு

ஆற்காடு: திமிரி அருகே கழிவுநீர் கால்வாயின் சிமென்ட் கலவை தொட்டாலே பெயர்ந்து வருவதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பழையனூர் கீழ்ப்பாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ‘பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா’ திட்டத்தின் கீழ் 5 தெருக்களில் ரூ.20 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழ்ப்பாடி கிராமத்தில் 4 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கால்வாய் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் வீடியோ ஒன்றை பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார்.

அந்த வீடிய தற்போது வைரலாகி வருகிறது. அதில், கால்வாய் அமைக்க பயன்படுத்தப்பட்ட சிமென்ட் கலவை தொட்டாலே பெயர்ந்து வருகிறது. அதன் தரம் இவ்வளவு தான் என்ற மாதிரி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. இதையடுத்து, திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் நேற்று அந்த இடத்தை வீடியோ பதிவு செய்த நபர் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் சேர்ந்து ஆய்வு செய்தனர்.

அதிகாரிகள் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு கால்வாயின்
தரம் குறித்து நேற்று விளக்கினர்.

அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள இடம் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இயந்திரம் கொண்டு துளையிட்டும், கடப்பாரையால் குத்தியும் சோதித்தனர். இதில், கால்வாய் தரமாக அமைக்கப்பட்டு வருவது தெரியவந்தது. மேலும், கால்வாய் தரம் குறித்தும் பொதுமக்களுக்கும் மற்றும் அந்த இளைஞருக்கும் அதிகாரிகள் தரப்பில் விளக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, "இப்பகுதியில் 5 இடங்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், வீடியோவில் பதிவான இடத்தின் பணிகள் இன்னும் முடியவில்லை. அதை வீடியோவை பதிவு செய்த நபர் கையில் எடுத்தபோது, உடனே வந்துள்ளது. இதனால், கால்வாய் தரம் குறித்து அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரையும் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அதன் தரத்தை நேற்று சோதனை செய்து காண்பித்தோம். மேலும், வீடியோ பதிவான இடத்தில் உள்ள சிமென்ட் கலவையும், அந்த பகுதியில் வேறு சில இடங்களில் மாதிரிகள் சேகரித்து தரத்தை சோதனைக்கு அனுப்பி உள்ளோம்" என்றனர்.

SCROLL FOR NEXT