திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பாலாறு பகுதிகளில் பட்டிகள் அமைத்து வளர்க்கப்படும் பன்றி கூட்டத்தால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் - தேவலாபுரம் பகுதியை இணைக்கும் பாலாறு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சிறு, சிறு பட்டிகள் அமைத்து சிலர் பன்றிகளை வளர்த்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான பன்றிகள் இங்குள்ள பட்டிகளில் வளர்க்கப்பட்டு, விற்பனைக்காக வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் காலாவதிஆகும் உணவுகள், உணவு கழிவுகள் இந்த மேம்பாலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் கொட்டப்படுகின்றன. இந்த உணவு கழிவுகளை சாப்பிடும் பன்றிக் கூட்டம் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்து, பாலாறு பகுதிகளில் சுற்றித்திரிகின்றன.
பாலாறு மேம்பாலத்தின் கீழ்பகுதியில் பட்டிகள் அமைத்து, அதிக அளவிலான பன்றிகள் வளர்க்கப்படுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மாநில நெடுஞ்சாலை பகுதியில் பாலாறு அமைந்துள்ளதால் இந்த பகுதி வழியாக செல்வோர் துர்நாற்றம் காரணமாக மூக்கை மூடிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால், ஆம்பூர் பாலாற்றை ஒட்டியுள்ள தேவலாபுரம் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் வசிப்போர் பல்வேறு நோய்களுக்கு ஆளா கின்றனர். பட்டிகளில் வளர்க்கப்படும் பன்றி கூட்டத்தில் பன்றிகளும் அவ்வப்போது நோய் தாக்குதலுக்கு ஆளாகி இறக்கின்றன. பன்றிகளை வளர்ப்போர், அதன் இறைச்சியையும் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
இதன் மூலம் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆம்பூர் பாலாறு மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ள பன்றி பட்டிகளையும், பன்றிகள் வளர்ப்போரின் குடில்களையும் அப்புறப்படுத்தி, பாலாறு பகுதியை மீட்க ஆம்பூர் நகராட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் கேட்டபோது, ‘‘அனுமதி பெறாமல் பொது இடங்களில் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. பாலாறு பகுதியில் பன்றிகளை வளர்க்க அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, அங்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.