இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் சிறிது தூரம் தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்ற பாஜக தலைவர் அண்ணாமலை. படம்: ம.பிரபு 
தமிழகம்

அமைச்சர் சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி பாஜக போராட்டம் - சென்னையில் அண்ணாமலை தலைமையில் சாலை மறியல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பதவி பிரமாணத்துக்கு எதிராக கலந்து கொண்டதாகவும், உதயநிதியின் பேச்சுக்கு மவுனம் காத்ததைக் கண்டித்தும், இந்து சமய அறநிலையத் துறைஅமைச்சர் சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்யக் கோரி தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் முன்பு பாஜகவினர் நேற்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர்

இந்தப் போராட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சென்னையில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், தமிழகபாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன், மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மாவட்டதலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் திமுக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது அண்ணாமலை பேசியதாவது: சனாதனத்தை வேரறுப்போம் என திமுகவினர் பேசியதற்கு, இந்தியா முழுவதும் இந்துக்கள் மட்டுமல்ல, அனைத்து மதத்தினரும் கண்டங்களைத் தெரிவித்துவருகின்றனர். ‘இன்னொரு முறை தமிழகத்தில் கடவுளை நம்பாதவர்கள், கடவுளை நம்புபவர்களைத் தவறாகப் பேசினால், மதுரையில் மீனாட்சிக்கு ரத்தத்திலே அபிஷேகம் நடத்தப்படும்’ என மதுரையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் அறிஞர் அண்ணா முன்பே முத்துராமலிங்கத் தேவர் பேசினார். இப்போது முத்துராமலிங்கத் தேவரைப் போன்ற தலைவர்கள் தமிழகத்தில் இல்லை என்ற ஆணவத்தில் திமுகவினர் பேசுகிறார்களா?

பாஜக ஆட்சிக்கு வரும்: திமுகவினர் ஆட்சிக்கு வந்தவுடன் சனாதனத்தை வேரறுப்போம் என்பார்கள். 5 ஆண்டுகள் கழித்து தேர்தல் வரும்போது, வேலை கையில் தூக்கி கொண்டு வீரவேல், வெற்றிவேல் என்பார்கள். தமிழகத்தில் 250 இடங்களில் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் கொடுக்கப் பட்டுள்ளது. அது வெற்று காகிதமாக இருக்கிறது.

தமிழகத்தில் பாஜக ஒரு நாள் ஆட்சிக்கு வரத்தான் போகிறது. அன்று இந்த காகிதம், எப்படி வேண்டுமானாலும் மாறும். இன்று செந்தில் பாலாஜிக்கு நடந்தது, நாளை அவர்களுக்கும் நடக்கும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் வருவதற்கு வாய்ப்புகளும் இருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

இதையடுத்து, வள்ளுவர் கோட்டத்தில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை முற்றுகையிட அண்ணாமலையின் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலையில் நடந்து சென்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

கடும் போக்குவரத்து நெரிசல்: இதையடுத்து அனைவரும் சாலையில் அமர்ந்ததால், போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்டநேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடன்பாடு ஏற்பட்டு, அனைவரும் கலைந்து சென்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர் சாலையில் அமர்ந்ததால், அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும்...: இதேபோல், திருச்சியில் ஹெச்.ராஜா, நெல்லையில் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடி தெற்கில்சசிகலா புஷ்பா, பெரம்பலூரில் தடா பெரியசாமி, விழுப்புரத்தில் ஏ.ஜி.சம்பத், செங்கல்பட்டு தெற்கில்வினோஜ் பி.செல்வம், வடக்கில் நாராயணன் திருப்பதி, சேலம் மேற்கில் எம்.எல்.ஏ. சரஸ்வதி உள்பட அந்தந்த மாவட்டங்களில் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெரும்பாலான இடங்களில் போராட் டத்தில் ஈடுபட்டவர்களை போலீ ஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT