தமிழகம்

அதிமுகவுக்கு பால பிரஜாபதி அடிகளார் ஆதரவு

செய்திப்பிரிவு

அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு அய்யா வழி சமய தலைவர் பால பிரஜாபதி அடிகளார் ஆதரவு தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். காசிமேட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை அய்யா வழி சமய தலைவர் பால பிரஜாபதி அடிகளார் நேற்று சந்தித்து, அதிமுக வேட்பாளர் இ.மதுசூதனனுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். அவர் ஆட்சி தொடர்ந்து சிறப்பாக நடப்பதற்கு இது ஒரு சந்தர்ப்பம். இதை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏழை மக்களுக்கு உணவுக்கு உத்தரவாதம் அளித்தவர் ஜெயலலிதா.

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மீட்பு போராட்டம் நடத்தியபோது ஜெயலலிதா ஆதரவு அளித்தார். சாத்தான்குளத்தில் தேரி மண் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளித்தார். அங்கிருந்து இங்கு வந்தவர்கள் தைரியமாக வாழவும் அவர்தான் வாய்ப்பளித்தார். அதற்காக நன்றிக்கடன் செலுத்த வேண்டும். எங்கள் சமுதாயம் மதுசூதனனுக்குதான் வாக்களிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT