காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் முதல்வர் பங்கேற்கும் மகளிர் உரிமைத் திட்ட தொடக்க விழாவுக்கான முன்னேற்பாட்டு பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமைத் திட்ட தொடக்க விழா அண்ணா பிறந்த நாளான செப். 15-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் இந்த விழாவை தொடங்கி வைக்கிறார்.
இந்த விழா நடைபெறும் இடத்தில் மேடை, துறைகளின் சார்பில் அமைக்கப்படும் கண்காட்சி, பயனாளிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அமைக்கப்படவுள்ள அரங்குகளின் விவரங்கள் குறித்து அலுவலர்களுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை செய்தார். மேலும் பயனாளிகளுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், எம்எல்ஏக்கள் உத்திரமேரூர் க.சுந்தர், காஞ்சிபுரம் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.