பர்கூர் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
தமிழகம்

தமிழகத்தின் ‘குட்டி சூரத்’ - பர்கூர் பேருந்து நிலையத்தில் வசதிகள் மேம்படுத்தப்படுமா?

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: பர்கூர் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் நகரம், தமிழகத்தின் குட்டி சூரத் என்றழைக்கப்படுகிறது. இதற்கு காரணம், பர்கூரில் சிறிய, பெரிய அளவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் உள்ளன. இதேபோல், பர்கூரைச் சுற்றி 300-க்கும் மேற்பட்ட கிரானைட் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன.

இதேபோல், பர்கூரில் தொடக்கப்பள்ளி முதல் மகளிர் கல்லூரி, பொறியியல் கல்லூரி என அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் நகரப் போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து நாள்தோறும் 32 நகரப் பேருந்துகள் வந்து செல்கின்றன.

குறிப்பாக, பர்கூரில் இருந்து சுற்றி உள்ள மத்தூர், போச்சம்பள்ளி மற்றும் ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள காளிகோவில், வரமலைகுண்டா, பச்சூர் என பல்வேறு பகுதிகளுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளும், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையங்களுக்கும்,

பல்வேறு பணி நிமித்தமாகவும் பொதுமக்கள் நாள்தோறும் பர்கூர் நகருக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், பர்கூர் பேருந்து நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள், கிராம மக்கள் அவதியுடன் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பர்கூரைச் சேர்ந்த முருகன் மற்றும் சிலர் கூறும்போது, வளர்ந்து வரும் பர்கூர் நகரில், உள்ள பேருந்து நிலையம் சிறிய இடத்தில் அமைந்துள்ளதால், இங்கு ஒரே நேரத்தில் 4 பேருந்துகள் கூட நிறுத்த முடியாத நிலை உள்ளது. குறிப்பாக செவ்வாய்கிழமைகளில் இங்கு சந்தை கூடும் போது, பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால், சாலையில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி கிடையாது. இருக்கைகள் இல்லாமல் பேருந்துகளுக்காக நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளதால், பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, பேருந்து நிலையத்தில் குடிநீர், இருக்கைகளுடன் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும். பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT