திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தில் பழங்குடி இருளர் மக்களின் குடியிருப்பு பகுதி 
தமிழகம்

பழுதடைந்த வீடுகள், சுகாதாரமற்ற குடிநீர், திறந்தவெளி கழிப்பறை... - தி.மலை அருகே பழங்குடி இருளர்கள் வேதனை

இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே நல்லவன்பாளையத்தில் பழுதடைந்த வீடுகள், சுகாதாரமற்ற குடிநீர், திறந்தவெளி கழிப்பறை என அடிப்படை வசதிகள் இல்லாமல் பழங்குடி இருளர் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 76-வது ஆண்டு விழாவை மத்திய, மாநில அரசுகள் கொண்டாடிய நிலையிலும், பழங்குடி இருளர் மக்களின் வாழ்வியல் முறை மற்றும் வாழ்வாதாரம் என்பது பல ஆண்டுகளாகவே பின்நோக்கியே உள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு, வசிப்பிடம், அடிப்படை கட்டமைப்பு என அனைத்து நிலைகளிலும் அவர்கள் பின் தங்கியுள்ளனர். பழங்குடி இருளர்கள் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்திட, பல திட்டங்களை அரசாங்கம் திரட்டினாலும், அரசு இயந்திரத்தில் உள்ளவர்கள் ஒத்துழைப்பு அளிக்க முன்வர வில்லை.

நத்தம் கணக்கில் பதிவேற்றவில்லை: இதற்கு எடுத்துக்காட்டாக, திருவண்ணா மலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமம், குளத்துமேட்டு தெருவில் வசிக்கும் பழங்குடி இருளர்களின் 26 ஆண்டுகால கோரிக்கையை கூறலாம். இவர்களில், 19 பேருக்கு கடந்த 1996-ம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பட்டா வழங்கியதற்கு அத்தாட்சியாக அரசு பதிவேட்டில் பதிவேற்றம் செய்யவில்லை.

கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், ஆட்சியர் என பலரிடம் மனு அளித்தும் நத்தம் கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யவில்லை என்பது பழங்குடி இருளர்களின் கோரிக்கையாகும். மேலும், பழுதடைந்து ஆபத்தாக உள்ள தொகுப்பு வீடுகளை அகற்றி புதிய தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும், குடிநீர், கழிப்பறை மற்றும் கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கானல் நீராகவே உள்ளது.

ரூ.10 ஆயிரம் கட்டாயம்: இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிளைத் தலைவர் கோதண்டம் கூறும்போது, “நல்லவன்பாளையம் குளத்துமேட்டு தெருவில் 19 பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு கடந்த 1996-ல் பட்டா வழங்கப்பட்டு, தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. பட்டா வழங்கியதற்கு அத்தாட்சியாக நத்தம் கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யவில்லை. இது குறித்து மனு அளிக்கப்பட்டும் பலனில்லை.

ஒரு குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என வருவாய்த் துறையில் உள்ளவர்கள் கறாராக கூறுகின்றனர். பாம்பு பிடித்தல், செங்கல் சூளை, கட்டுமானம் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களாக உள்ள பழங்குடி இருளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் என்பது எட்டாக்கனியாகும். 10 ஆயிரம் ரூபாய்-க்கு குறைவாக கொடுத்தால் நத்தம் கணக்கில் பதிவேற்றம் செய்து தரமுடியாது எனக்கூறி விரட்டப்படுகின்றனர்.

தனி நபர் கழிப்பறை தேவை: கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதடைந்து விட்டன. ஒரு சில வீடுகள் இடிந்துவிட்டன. பல வீடுகள், எப்போது விழும் என்ற அச்சத்தில் மக்கள் வாழ்கின்றனர். பொருளாதார வசதி இல்லாததால் கீற்றுக் கொட்டகை அமைத்து, முந்தைய கால முறைக்கு திரும்பி விட்டனர்.

மத்திய, மாநில அரசுகளின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டிக் கொடுக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு விளக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மின் இணைப்பு திறனை அதிகரிக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய் வசதி கிடையாது. பொது சுகாதார திட்டத்தின் கீழ் கழிப்பறை வசதியும் இல்லை.

மத்திய அரசு வழங்கிய ரூ.12 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட தனி நபர் கழிப்பறை கட்டிக் கொடுக்கவில்லை. இதனால், திறந்த வெளியை பயன்படுத்துகின்றனர். அவர் களுக்கு பொது கழிப்பறையை கட்டிக் கொடுக்க வேண்டும்.

கிணற்றில் பிளாஸ்டிக் கழிவுகள்: அனைத்து உயிர்களுக்கும் குடிநீர் முக்கியம். பழங்குடி இருளர் இன மக்களுக்கு திறந்தவெளி கிணற்றில் இருந்து ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது. இந்த கிணற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளையும் காணலாம். பாசி படர்ந்து அசுத்தமாக உள்ளது.

இந்த சுகாதாரமற்ற குடிநீரைதான் பழங்குடி இருளர்கள் பருகுகின்றனர். மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி மற்றும் சிறு மின் விசை பம்ப் இருந்தும் பலனில்லை. பழங்குடி இருளர் மக்களுக்கு சுகாதாரமான குடிநீரை வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

ஆட்சியர் உறுதி: இது குறித்து திருவண்ணாமலை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராமதாஸ் கூறும்போது, “நல்லவன்பாளையம் கிராமத்தில் 19 குடும்பங்களுக்கு கடந்த 1996-ல் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நத்தம் கணக்கில் பதி வேற்றம் செய்து தர வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷை சந்தித்து மனு அளித்துள்ளோம்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும் அவரிடம், பழங்குடி இருளர் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT