தமிழகம்

சென்னை | காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: இறை நம்பிக்கையாளர் போற்றும் ஆட்சி என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கடந்த 2 ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத் துறையால் நடத்தப்படும் 1,000-வது கும்பாபிஷேகம் என்பதால் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களை சீரமைத்து, திருப்பணிகள் மேற்கொண்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளில் செப்.9-ம் தேதி (நேற்றுமுன்தினம்) வரை 998 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. 999-வது கோயிலாக சென்னை தியாகராய நகர் விளையாட்டு விநாயகர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

இதைத் தொடர்ந்து, 1,000-வதுகோயிலாக 400 ஆண்டுகள் பழமையான சென்னை மேற்கு மாம்பலம் மேட்லி சுரங்கப் பாதை அருகே உள்ள காசி விசாலாட்சி உடனுறைகாசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு 4-வது கால யாகசாலை பூஜையும், 7 மணிக்கு கலசபுறப்பாடும் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க கோயில் விமான கோபுரங்கள் மற்றும் ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், பரிவார தேவதைகள், மூலவர், உற்சவருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தப்பட்டது. மாலையில் திருக்கல்யாணமும், அதைத் தொடர்ந்து சுவாமி வீதி உலாவும் நடந்தது.

கும்பாபிஷேக விழாவில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர்சேகர்பாபு, துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி - அம்பாளை தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 32 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அந்த வகையில், கடந்த 2021 மே 7-ம் தேதிமுதல் 2023 செப்.10-ம் தேதி (நேற்று)வரை 1,030 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் 11 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கடந்த 2 ஆண்டுகளில் 1,000-வது கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘எல்லார்க்கும் எல்லாம்என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகின்றன. குறிப்பாக, இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன.

கடந்த 2 ஆண்டு காலத்தில் ரூ.5,000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது 1,000-வதுகோயில் குடமுழுக்கு விழா, மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் நடத்தப்பட்டுள்ளது. இறை நம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT